சிரியா போர்: “துருப்புகளை திரும்பப் பெற அமெரிக்கா திட்டம்”

சிரியாவில் நடந்து வரும் போரிலிருந்து தனது படைகளை திரும்பப்பெற அமெரிக்கா தயாராகிவருவதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் வீழ்த்தப்பட்டுவிட்டனர் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தாம் வெளியிட்ட டிவிட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு சிரியாவில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்க சுமார் 2,000 அமெரிக்கப்படையினர் உதவி செய்தனர். இன்னும் சில பகுதிகளில் சண்டை நடந்துகொண்டுதான் இருக்கிறது.

ஐ.எஸ். குழுவினர் மீண்டும் தலையெடுத்துவிடாமல் தடுப்பதற்காக அங்கே மேலும் சிலகாலம் தங்கியிருக்கவேண்டும் என்று அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் நினைப்பதாகக் கருதப்பட்டது.

ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களை ஒழிப்பதற்கான உலகளாவிய கூட்டணிக்கான அமெரிக்கத் தூதரான பிரெட் மெக்கர்க் சில நாள்களுக்கு முன்பு இது பற்றிக் கூறும்போது, “ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் இல்லாமல் போய்விடுவார்கள் என்று யாரும் சொல்லவில்லை. யாரும் அவ்வளவு விவரமில்லாதவர்கள் இல்லை. எனவே நாங்கள் களத்தில் நீடித்து நிற்கவும், அதன் மூலம் இந்தப் பகுதிகளில் ஸ்திரத்தன்மை நிலவுவதை உறுதி செய்யவும் விரும்புவதாக ” தெரிவித்தார்.

ஆனால், வடக்கு சிரியாவில் அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் குர்து போராளிகள் மீது தாக்குதல் தொடுக்க தயாராகிவருவதாக துருக்கி தெரிவித்திருந்த நிலையில் தற்போது அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறுவது குறித்த தகவல்கள் வெளியாகின்றன. துருக்கி அத்தகையத் தாக்குதலைத் தொடுக்குமானால், அது அமெரிக்காவும் துருக்கியும் மோதும் நிலைக்கு கொண்டு செல்லும்.

அதைப் போலவே, அமெரிக்கத் துருப்புகள் சிரியாவில் இருந்து வெகு விரைவில் வெளியேறும் என்று இந்த ஆண்டின் தொடக்கத்திலே அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

வடக்கு சிரியாவில் உள்ள குர்துப் பகுதியில் அமெரிக்கப் படைகள் பெருமளவில் நிலைகொண்டுள்ளன.

சிரியாவில் பெரும் பரப்பளவை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஐ.எஸ். குழுவினர் கைப்பற்றினர். அத்துடன், சிரியா மற்றும் இராக்கின் சுமார் எட்டு மில்லியன் மக்கள் மீது கடுமையான ஆட்சியை கட்டவிழ்த்துவிட்டது இந்த ஐ.எஸ். குழு. இந்நிலையில் சிரியாவின் குர்துப் போராளிகள் மற்றும் அரபி போராளிகள் (சிரிய ஜனநாயகப் படையினர்) ஆகியோருடன் கூட்டு சேர்ந்து அமெரிக்கப் படையினர் கிட்டத்தட்ட ஐ.எஸ். குழுவினரை ஒழித்து அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை மீட்டனர்.

ஆனால், ஐ.எஸ். தீவிரவாதக் குழு முற்றிலும் அழிந்துவிடவில்லை. சிரியாவில் இன்னமும் 14,000 ஐ.எஸ். போராளிகள் இருப்பதாகவும், இதைவிட அதிக எண்ணிக்கையில் அருகில் உள்ள இராக்கில் அவர்கள் இருப்பதாகவும் சமீபத்திய அமெரிக்க அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இத்தீவிரவாதக் குழுவினர் கொரில்லா போர்முறைக்கு மாறி தங்கள் அமைப்பை மீண்டும் கட்டமைக்க முயல்வார்கள் என்ற அச்சம் நிலவுகிறது.

ஆனால், அமெரிக்காவுக்கும் குர்துப் போராளிகளுக்கும் இடையில் உள்ள கூட்டணி அண்டை நாடான துருக்கிக்கு எரிச்சலூட்டியது. சிரியா ஜனநாயகப் படையின் முக்கிய போராடும் பிரிவான குர்திஷ் ஒய்.ஜி.பி. படைப்பிரிவு துருக்கியில் குர்து தன்னாட்சி கோரி போராடி வரும் தடை செய்யப்பட்ட குர்து குழுவினரோடு தொடர்புடையது என்று துருக்கி நினைக்கிறது.

சிரியாவில் உள்ள ஒய்.ஜி.பி. படையினர் மீது தங்கள் நாடு விரைவில் போர்தொடுக்கும் என துருக்கி அதிபர் ரிசெப் தயிப் எர்துவான் திங்கள்கிழமை கூறினார். தமது திட்டம் குறித்து தாம் அமெரிக்க அதிபர் டிரம்புடன் தொலைபேசியில் விவாதித்ததாகவும், அவர் நேர்மறையான பதிலைக் கூறியிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

சிரியாவின் வடபகுதியில் மட்டுமில்லாமல், ஐ.எஸ். படையினர் கடைசியாக கட்டுப்படுத்தும் தென் கிழக்குப் பகுதியிலும் அவர்களை எதிர்த்து நடக்கும் சண்டையில் அமெரிக்கப் படையினர் உதவி வருகின்றனர்.

சிரியாவில் ஐஎஸ் அமைப்பனர் வீழ்த்தப்பட்டுள்ளனர். தங்கள் படைகள் அங்கிருந்ததற்கு அதுமட்டுமே காரணம் என டிரம்ப் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் ஐஎஸ் அமைப்பினர் அங்கு மீண்டும் செயல்படாமல் இருப்பதில் உறுதியாக உள்ளனர்.