- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

சினிமா விமர்சனம்: இரும்புத் திரை
திரைப்படம் இரும்புத் திரை
நடிகர்கள் விஷால், சமந்தா, அர்ஜுன், ரோபோ ஷங்கர், காளி வெங்கட், டெல்லி கணேஷ்
இசை யுவன் ஷங்கர் ராஜா
இயக்கம் பி.எஸ். மித்ரன்
ஆதார் தகவல்கள், ஃபேஸ்புக் தகவல்கள், வங்கி கணக்குத் தகவல்கள் திருடப்படுவது குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகிவரும் பின்னணியில் உருவாகியிருக்கிறது இந்த த்ரில்லர்.
ராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்றும் கதிரவன் (விஷால்), தன் தங்கையின் திருமணத்திற்காக வங்கிகளில் கடன் கிடைக்காததால், பொய் சொல்லி ஒரு தனியார் வங்கியில் கடன் பெறுகிறார்.
ஆனால், பணம் அவரது வங்கிக் கணக்கிற்கு வந்து சேர்ந்த சிறிது நேரத்திலேயே முழுவதும் திருடப்படுகிறது. பொய் சொல்லி கடன் பெற்றதால் காவல்துறையிடமும் செல்ல முடியாமல் தவிக்கிறார் கதிரவன்.
அவரது பணம் மட்டுமல்லாமல் மேலும் பலரது படமும் இதேபோல திருடப்பட்டிருப்பது தெரிகிறது. இதன் பின்னணியில இருப்பது ஒயிட் டெவில் (அர்ஜுன்) என்ற மர்ம நபர் எனத் தெரியவருகிறது.
பொய் சொல்லி கடன் வாங்கியதால் வேலையும் பறிபோக, ஒயிட் டெவிலை வீழ்த்த கதிரவன் எடுக்கும் முயற்சிகளே மீதிப் படம்.
வங்கிக் கணக்குகளிலிருந்து அதிநவீன முறையில் பணம் திருடப்படுவது குறித்த கதை என்பதால், பணம் எப்படித் திருடப்படுகிறது என்பதை மிகத் துல்லியமாக விளக்கியிருக்க வேண்டும்.
ஆனால், அதற்குப் பதிலாக, இந்தப் படத்தில் பணம் திருடப்படுவது மிக மிக மேலோட்டமாகவும் குழப்பமானதாகவும் காட்டப்படுகிறது.
கதாநாயகன், முன்பின் தெரியாத ஒரு நபரிடம் கையெழுத்திடப்பட்ட காசோலை ஒன்றை மட்டுமே தருகிறார். அந்தக் கையெழுத்தை மட்டும் வைத்து கிட்டத்தட்ட பத்து லட்ச ரூபாய் அவரது கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது எப்படி என்பது தெளிவாக இல்லை.
வங்கிக் கணக்கு மோசடிகளில், இணையத்தில் வரும் போலியான மின்னஞ்சல்கள், தகவல்களை நம்பி ஏமாறுவது ஒரு வகை. நம்முடைய ஏடிஎம் கார்டு, காசோலை ஆகியவற்றை பயன்படுத்தி பணம் திருடப்படுவது மற்றொரு வகை. இந்த இரண்டு வகை மோசடியையும் ஒன்றாக இணைத்துக் குழப்பியிருக்கிறார்கள்.
படத்தில் ராணுவ மேஜராக வரும் கதாநாயகனுக்கு 6 லட்ச ரூபாய்கூட வங்கிக் கடன் கிடைக்கவில்லை என்று காட்டுவது நம்பத் தகுந்ததாக இல்லை. அந்த ஆறு லட்ச ரூபாய்க்காக வங்கியை ஏமாற்றும் அளவுக்கான மோசடியில் ஒரு ராணுவ மேஜர் ஈடுபடுவாரா?
இந்தப் படத்தில் கதாநாயகிக்கு பெரிய வேலையேதும் இல்லை. மாயவன் படத்தில் வருவதைப் போலவே, அடிக்கடி கோபம் வரும் கதாநாயகனுக்கு உளவியல் சிகிச்சை தரும் மருத்துவர் ரதிதேவியாக வருகிறார் சமந்தா.
இரண்டு டூயட், அவ்வப்போது தலைகாட்டி, கதாநாயகனுக்கு ஆறுதல் சொல்வதைத் தவிர படத்தில் அவருக்கு எந்த பணியும் இல்லை. படத்தின் முதல் பாதியில் நாயகன் – நாயகி இடையிலான காட்சியால் படத்தின் வேகம் பெரிதும் தடைபடுகிறது.
படம் துவங்கும்போது ஒரு வங்கி மோசடி காட்டப்படுகிறது. அதற்குப் பிறகு இடைவேளை வரை படம் எங்கெங்கோ செல்வதால், கதையின் மையம் எது என்ற குழப்பம் ஏற்படுகிறது. இடைவேளைக்கு அருகில், மீண்டும் படம் மையப்புள்ளிக்குத் திரும்புகிறது.
சண்டைக் காட்சிகளில் அட்டகாசமாக தெரியும் விஷால் மற்ற காட்சிகளில் சாதாரணமாகவே வந்துபோகிறார். ஆனால், வில்லனாக வரும் அர்ஜுன் சிறிது நேரத்திற்கு கவனிக்க வைக்கிறார். ரோபோ ஷங்கர் காமெடி சில காட்சிகளில் மட்டுமே பலனளிக்கிறது.
விஷாலுக்கும் அவரது தந்தையாகவரும் டெல்லி கணேஷிற்கும் இடையிலான உறவு, படத்தின் மிக நுணுக்கமான ஒன்று.
டிஜிட்டல் பணப் பறிமாற்றத்தை அரசு ஊக்குவிக்கும் நிலையில், அது தொடர்பான ஒரு சிறு எச்சரிக்கையை மனதில் விதைக்கும் இந்தப் படம், விஷால் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடும்.