சிதம்பரத்தின் மகன் கார்த்தியை கைது செய்வதற்காக காத்திருக்கிறோம் – அமலாக்கத்துறை

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்காக நடவடிக்கைக்காக காத்திருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை வாதத்தை கேட்ட சுப்ரீம் கோர்ட், சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் ஜாமின் கேட்ட மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. ”12 வெளிநாட்டு வங்கிக் கணக்குகள், 12 வெளிநாட்டு சொத்துக்களில் சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 16 நாடுகளில் கண்டறியப்பட்ட சொத்துக்களுடன் சிதம்பரத்திற்கு தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஜாமின் வழங்கினால் சாட்சிகளை மிரட்ட வாய்ப்புள்ளது” என்றும் அமலாக்கத்துறை வாதிட்டது. அதை கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமின் வழங்க டில்லி ஐகோர்ட் மறுத்ததை எதிர்த்து, சிதம்பரம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது வாதிட்ட அமலாக்கத்துறை, இந்த வழக்கில் சிதம்பரத்தின் மகன் கார்த்தியை கைது செய்வதற்காக காத்திருக்கிறோம். கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய டில்லி ஐகோர்ட் ஏற்கனவே இடைக்கால தடை விதித்திருப்பதால், தடை விலகுவதற்காக காத்திருக்கிறோம். இந்த வழக்கில் கார்த்தி ஏற்கனவே முன்ஜாமின் பெற்றுள்ளார். அந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு கார்த்தியை கைது செய்ய உள்ளோம்.

இவ்வழக்கில் சிதம்பரம் ஒன்றும் அப்பாவி இல்லை. மறைமுகமாக இவ்வழக்கில் அவருக்கு தொடர்பு உண்டு. இது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் தொடர்பான வழக்கு மட்டுமல்ல. மற்ற நிறுவனங்களிலும் சட்ட விரோதமாக அந்நிய முதலீட்டிற்கு அனுமதி அளித்ததும் அடங்கி உள்ளது. 16 நிறுவனங்கள் பண மோசடி வழக்கில் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. 12 வெளிநாட்டு வங்கிக் கணக்குகள், 12 வெளிநாட்டு சொத்துக்களிலும் சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 16 நாடுகளில் கண்டறியப்பட்ட சொத்துக்களுடன் சிதம்பரத்திற்கு தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கினால் அது வழக்கு விசாரணையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். சாட்சிகளை குற்றவாளிகள் மிரட்டுவதற்கும் வாய்ப்புள்ளது என வாதிடப்பட்டது.

அமலாக்கத்துறையின் வாதங்களை கேட்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர். தற்போது சிதம்பரத்திடம் நடத்தப்பட்டு வரும் விசாரணை தொடர்பான விபரங்களை அறிக்கையாக 3 சீலிடப்பட்ட கவர்களில் தாக்கல் செய்ய அமலாக்கத்துறையை, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது.