சிக்சர் “மன்னன்” கிறிஸ் கெய்லின் ஆசை என்ன தெரியுமா?

ஐபிஎல் தொடரில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற வேண்டும் என்பதே தனது ஆசை என்று கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழகத்தில் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இப்போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் பிராவோ, கெய்ல் இருவரும் கடந்த சில நாட்களாக சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னை வேலம்மாள் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கெய்ல் பங்கேற்றார். அப்போது மாணவர்கள் அவரிடம் ஜாலியாக பல கேள்விகளைக் கேட்டனர்.

ஒரு மாணவர் நீங்கள் எதிர்காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேருவீர்களா? என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த கெய்ல், ஐபிஎல் போட்டிகளில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடம்பெறும் போது நான் டோனியிடம் இது தொடர்பாக பேசுவேன் என்றார்.

அதே போல் நீங்கள் ஆட்டோகிராஃப் வாங்க விரும்பும் பிரபலம் யார்? என்று கேட்கப்பட்டது.

இதற்கு, இப்ப யாருங்க ஆட்டோகிராஃப் எல்லாம் வாங்குறாங்க. ஆனால் தீபிகா படுகோனேவுடன் ஒரு செல்ஃபி எடுக்க வேண்டும் என்று ஆசை என்று தெரிவித்துள்ளார்.