சிகிச்சையின் போது ஜெயலலிதாவை அமைச்சர்கள் சந்தித்தார்களா?- அப்போலோ நிர்வாகம் பதில்

ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெற்றபோது பார்த்தேன் என்று சில அமைச்சர்களும், பார்க்கவில்லை என சில அமைச்சர்களும் முரணாக பேசுவது குறித்த கேள்விக்கு பதிலளிக்க அப்போலோ நிர்வாகி மறுத்து விட்டார்.

ஜெயலலிதா மரணம் மர்மம் குறித்த பல்வேறு சர்ச்சை கருத்துகள் எழும் நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கடந்த 22-ம் தேதி மதுரையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது, “ஜெயலலிதாவை தாங்கள் யாரும் பார்க்கவில்லை என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க அனைத்து அரசியல் தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர். இந்நிலையில் நேற்று கீழ்ப்பாக்கம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் செல்லூர் ராஜு தானும் மற்ற அமைச்சர்களும் மருத்துவமனையில் ஜெயலலிதாவை சந்தித்ததாக கூறியது மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

மறுபுறம் ஜெயலலிதா மூன்று நாட்கள் சுயநினைவுடன் இருந்தார் என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் பேட்டியளித்த நிலையில் மூன்று தொகுதி இடைத்தேர்தலில் ஜெயலலிதா கைரேகை எப்படி பெறப்பட்டது என்ற கேள்வியை உயர் நீதிமன்றம் எழுப்பியுள்ளது.

ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ள நிலையில் டெல்லியில் விழா ஒன்றில் கலந்துகொண்ட அப்போலோ குழும தலைவர் பிரதாப் சி.ரெட்டியிடமும், நிர்வாகி ஹரிபிரசாத்திடமும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அப்போலோ குழும தலைவர் பிரதாப் சி.ரெட்டி கூறியதாவது:

ஜெயலலிதா மரணம் குறித்த எந்த விசாரணைக்கும் தயாராக உள்ளோம். விசாரணை ஆணையத்திற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க அப்பல்லோ நிர்வாகம் தயாராக உள்ளது.

ஜெயலலிதாவுக்கு அனைத்து விதமான சிகிச்சைகளும் சிறப்பாக அளிக்கப்பட்டன, 100 சதவிகிதம் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சை குறித்த அனைத்து ஆவணங்கள், கண்காணிப்பு கேமரா பதிவுகள் விசாரணை ஆணையத்திடம் உரிய நேரத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது என அப்பல்லோ மருத்துவ பணிகள் தலைவர் ஹரிபிரசாத் பேட்டியளித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அறையில் சிசிடிவி கேமராக்கள் இல்லை என விளக்கம் அளித்த அவர் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒவ்வொரு தளத்திலும் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டிருந்தது எனத் தெரிவித்தார். ஜெயலலிதாவை பார்த்தோம் பார்க்கவில்லை என அமைச்சர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அமைச்சர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசுவது குறித்து விளக்கம் அளிக்க முடியாது என ஹரிபிரசாத் என மறுத்துவிட்டார்.

விசாரணை ஆணைய நீதிபதி ஆறுமுகசாமி கேட்டால் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிப்போம் எனவும் மருத்துவமனை விளக்கமளித்துள்ளது.