சிஏஏ.,வால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் போராடுவேன்: ரஜினிகாந்த்

சிஏஏ சட்டம் குறித்து பீதி கிளப்பப்படுகிறது என்றும், இந்த சட்டத்தால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால், முதல் ஆளாக தான் களத்தில் இறங்கி போராடுவேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

துாத்துக்குடியில் உள்ள, ‘ஸ்டெர்லைட்’ ஆலைக்கு எதிராக, நடந்த பேரணியில் வன்முறை வெடித்தது. இதில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் இறந்தனர். பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட சென்ற ரஜினி, ‘வன்முறை நிகழ்ந்ததற்கு, சமூக விரோதிகளே காரணம்’ என்றார். துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ரஜினி தெரிவித்த கருத்துக்கு அவர் வரும் 25ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, விசாரணை கமிஷன் ‘சம்மன்’ அனுப்பியதாக கூறியது.

இந்நிலையில், இன்று ரஜினி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, எனக்கு இன்னும் சம்மன் வரவில்லை. சம்மன் வந்தால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பேன். சிஏஏ.,வால் முஸ்லிம்களுக்கு பெரிய அச்சுறுத்தல் இருக்கிறது என ஒருவித பீதியை கிளப்பியுள்ளனர். ஆனால், இங்குள்ள முஸ்லிம்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என மத்திய அரசு தெளிவாக கூறியுள்ளது. பிரிவினையின் போது செல்லாமல் இதுதான் எங்கள் ஜென்மபூமி என இங்கேயே வாழும் முஸ்லிம்களை எப்படி வெளியே அனுப்புவார்கள்? சிலர் சுயலாபத்திற்காக தூண்டி விடுகின்றனர். குடியுரிமை திருத்த சட்டத்தால், முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் முதல் ஆளாக களத்தில் இறங்கி நானே போராடுவேன்.

 

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும். என்பிஆர் முக்கியம் மற்றும் அவசியம். மக்கள் தொகை பதிவேடு இருந்தால் தான் யார் வெளிநாட்டவர்கள் என்பது தெரிய வரும். என்ஆர்சி இன்னும் அமல்படுத்தவில்லை; ஆராய்ந்து வருகின்றனர். மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கும்போது, அந்த பிரச்னையை தீர ஆராய்ந்து பின்னர் போராடுங்கள். நான் நேர்மையாக வருமான வரி செலுத்துபவன் என்பது வருமான வரித்துறைக்கே தெரியும். சட்ட விரோதமாக எந்த தொழிலும் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.