சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தியது இலங்கை தவானின் சதத்திற்கு பலன் இல்லை

லண்டன்,

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 322 ரன்களை ‘சேசிங்’ செய்து வெற்றி பெற்றது. தவானின் சதம் வீண் ஆனது.

சாம்பியன்ஸ் கோப்பை

8 அணிகள் இடையிலான 8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கி லாந்தில் நடந்து வருகிறது.

இதில் லண்டன் ஓவலில் நேற்று அரங்கேறிய 8-வது லீக்கில் இந்தியாவும், இலங்கையும் (பி பிரிவு) பலப்பரீட்சை நடத்தின. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இலங்கை அணியில் மூன்று மாற்றமாக காயத்தில் இருந்து மீண்ட கேப்டன் மேத்யூஸ் அணிக்கு திரும்பினார். இதே போல் குணதிலகா, திசரா பெரேராவும் இடம் பிடித்தனர். தரங்கா, கபுகேதரா, பிரசன்னா நீக்கப்பட்டனர்.

சிறப்பான தொடக்கம்

‘டாஸ்’ ஜெயித்த இலங்கை கேப்டன் மேத்யூஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். மேகமூட்டமான சீதோஷ்ண நிலையை பயன்படுத்திக்கொள்ள விரும்புவதாக (பந்து வீச்சு எடுபடும் என்று கருதி) அவர் கூறினார்.

இதையடுத்து ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். மலிங்காவின் முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பி ரோகித் சர்மா ரன் கணக்கை தொடங்கி வைத்தார். இருவரும் அவசரமின்றி பக்குவமாக ஆடினர். ஏதுவான பந்துகளை தண்டிக்க தவறவில்லை. 19.2 ஓவர்களில் இந்தியா 100 ரன்களை தொட்டது. ரோகித் சர்மா சிக்சர் அடித்து 31-வது அரைசதத்தை எட்டிய போது, அது அணியின் ஸ்கோரை 100 ரன்களை கடக்கவும் வழிவகுத்தது.

கோலி டக்-அவுட்

வலுவான அஸ்திவாரம் போட்டுக்கொடுத்த இந்த ஜோடி ஸ்கோர் 138 ரன்களாக (24.5 ஓவர்) உயர்ந்த போது பிரிந்தது. மலிங்காவின் பந்து வீச்சில் சிக்சர் விளாசிய ரோகித் சர்மா (78 ரன், 79 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) அடுத்த பந்தில் கேட்ச் ஆகிப்போனார். 2-வது விக்கெட்டுக்கு இறங்கிய கேப்டன் விராட் கோலி (0), நுவான் பிரதீப்பின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டிக்வெல்லாவிடம் கேட்ச் ஆகி ஏமாற்றினார். முந்தைய ஆட்டத்தின் ஹீரோ யுவராஜ்சிங்கும் தாக்குப்பிடிக்கவில்லை. அவர் 7 ரன்னில் (18 பந்து), குணரத்னேவின் ‘யார்க்கர்’ பந்து வீச்சை தடுத்து ஆடிய போது பேட்டில் பட்ட பந்து ஸ்டம்பையும் பதம் பார்த்தது.

இதையடுத்து முன்னாள் கேப்டன் டோனி நுழைந்ததும், ரசிகர்களின் ஆரவாரம் காதை பிளந்தது. டோனிக்கும் அதே ஓவரில் எல்.பி.டபிள்யூ. கேட்டு முறையிட்டனர். டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்து பார்த்தும் எதிரணிக்கு பலன் இல்லை.

தவான் சதம்

அடுத்தடுத்து விக்கெட் சரிவால் மிடில் ஓவர்களில் ரன்வேகம் சற்று தளர்ந்தாலும் ஷிகர் தவானும், டோனியும் கைகோர்த்து ஆட்டத்திற்கு மீண்டும் புத்துயிர் ஊட்டினர். 38 ஓவர்களில் இந்தியா 200 ரன்களை தாண்டியது. அபாரமாக ஆடிய ஷிகர் தவான் பவுண்டரி அடித்து தனது 10-வது சதத்தை பூர்த்தி செய்தார்.

தவானும், டோனியும் அடித்து விளையாடி ஸ்கோரை மளமளவென ஏற்றினர். டோனி ஒரு இமாலய சிக்சரும் பறக்க விட்டு குதூகலப்படுத்தினார். இலங்கை பவுலர்கள் பெரும்பாலும் சற்று எழும்பும் வகையிலேயே பந்து வீசினர். ஆனால் அவர்களின் வியூகம் இந்திய பேட்ஸ்மேன்கள் முன் எடுபடவில்லை.

தனது பங்குக்கு 125 ரன்கள் (128 பந்து, 15 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசிய ஷிகர் தவான், மலிங்கா வைடாக வீசிய பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 9 ரன்னில் (5 பந்து, ஒரு சிக்சர்) வெளியேறினார். மறுமுனையில் அமர்க்களப்படுத்திய டோனி 62-வது அரைசதத்தை அடித்ததுடன், அணி 300 ரன்களை தாண்டவும் உதவி புரிந்தார்.

இந்தியா 321 ரன்

கடைசி ஓவரில் டோனி 63 ரன்களில் (52 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்தார். அதைத் தொடர்ந்து எஞ்சிய 4 பந்துகளில் கேதர் ஜாதவ் ஒரு சிக்சரும், 2 பவுண்டரியும் விரட்டி கச்சிதமாக முடித்து வைத்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் குவித்தது. சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியாவின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். கேதர் ஜாதவ் 25 ரன்களுடன் (13 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். கடைசி 10 ஓவர்களில் மட்டும் இந்திய அணி 103 ரன்கள் சேகரித்தது குறிப்பிடத்தக்கது.

குசல் மென்டிஸ்

பின்னர் 322 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணியில் டிக்வெல்லா 7 ரன்னில் கேட்ச் ஆனார். இதன் பிறகு 2-வது விக்கெட்டுக்கு குணதிலகாவும், குசல் மென்டிசும் இணைந்து இந்திய பவுலர்களுக்கு ‘தண்ணி’ காட்டினர். ஆடுகளம் பந்துவீச்சுக்கு எந்த வகையிலும் ஒத்துழைக்காததால் இலங்கை பேட்ஸ்மேன்கள் சர்வ சாதாரணமாக ரன்களை திரட்டினர். குசல் மென்டிஸ் 24 ரன்னில் இருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை பந்து வீசிய ஹர்திக் பாண்ட்யா தவற விட்டார். இந்த வாய்ப்பை மென்டிஸ் அருமையாக பயன்படுத்திக் கொண்டார்.

இருவரும் தேவையான நேரத்தில் பவுண்டரிகள் அடித்து ரன்ரேட்டை சீராக உயர்த்தினர். வலுவான அடித்தளம் ஏற்படுத்தி கொடுத்த இந்த கூட்டணியை ரன்-அவுட் மூலமே உடைக்க முடிந்தது. குணதிலகா 76 ரன்களிலும் (72 பந்து, 7 பவுண்டரி, 2சிக்சர்), குசல் மென்டிஸ் 89 ரன்களிலும் (93 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார்கள்.

இலங்கை வெற்றி

அடுத்து வந்த பேட்ஸ்மேன்களுக்கும் இந்திய பவுலர்களால் குடைச்சல் கொடுக்க இயலவில்லை. 7 பவுலர்களை பயன்படுத்தி பார்த்தும் இலங்கையின் பயணத்துக்கு முட்டுக்கட்டை போட முடியவில்லை. 47 ரன்கள் எடுத்த குசல்பெரேரா தசைப்பிடிப்பால் ‘ரிட்டயர்ட்ஹர்ட்’ ஆகி வெளியேறினார். இதன்பின்னர் கேப்டன் மேத்யூஸ் (52 ரன், 45 பந்து, 6 பவுண்டரி), குணரத்னே (34 ரன், 21 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இலங்கை அணி 48.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 322 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்த மைதானத்தில் ‘சேசிங்’ செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இது தான். இதன் மூலம் இலங்கை அணி அரைஇறுதி வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டது.