சவுந்தர்யா ரஜினிகாந்திற்கும், தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் திருமணம்

சவுந்தர்யாவை மணக்கும் விசாகன், வர்த்தகம் தொடர்பான மாஸ்டர் டிகிரியை பெங்களூரு பல்கலைக்கழகத்தில் முடித்தவர்.

ரஜினிகாந்தின் அரசியல் பற்றியே பேசிக்கொண்டிருந்தவர்கள், இப்போது அவரது இளைய மகள் சவுந்தர்யா திருமணம் குறித்து விசாரித்தபடி இருக்கிறார்கள். சவுந்தர்யா ரஜினிகாந்திற்கும், தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் பிப்ரவரி 11-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது.

திருமண நிச்சயதார்த்தம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை கோடம்பாக்கத்தில் ரஜினிகாந்தின் ராகவேந்திரா மண்டபத்தில் நேற்று (பிப்ரவரி 8) நடைபெற்றது. ரசிகர்கள் கூட்டத்தை தவிர்க்கும் விதமாக முன்கூட்டியே திட்டமிட்டு, காதும் காதும் வைத்த மாதிரி இந்த வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தி முடித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார். அதனால் விழா தொடர்பான படங்கள் வெளியே வந்த பிறகுதான் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதே பலருக்கு தெரிய வந்தது.

சவுந்தர்யா ரஜினிகாந்த் – விசாகன் வணங்காமுடி திருமணம் முக்கிய அம்சங்கள் இங்கே:
1. இந்தத் திருமணம் நடைபெற இரு குடும்பத்தாருக்கும் பாலமாக இருந்து உதவியவர், திருநாவுக்கரசர். இதனாலேயே ஓரிரு முறை ரஜினியை அவர் சந்திக்க நேர்ந்தது. அதனாலேயே திருநாவுக்கரசர் பதவி பறிக்கப்பட்டதாக சிலர் கிளப்பி விட்டனர்.

ஆனால் பதவி பறிக்கப்பட்ட திருநாவுக்கரசரை அவரது வீட்டுக்கே சென்று பத்திரிகை வைத்து விழாவுக்கு அழைத்தார் சூப்பர் ஸ்டார். தனது மகள் திருமணத்திற்கு அரசர் உதவியதை வெளிப்படையாகவும் ரஜினிகாந்த் கூறினார்.

2. சவுந்தர்யாவை மணக்கும் விசாகன், வர்த்தகம் தொடர்பான மாஸ்டர் டிகிரியை பெங்களூரு பல்கலைக்கழகத்தில் முடித்தவர். ஏபெக்ஸ் லேபரட்டரிஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற மருந்து கம்பெனியின் இயக்குனராக இருக்கிறார் அவர்.

3. சவுந்தர்யா, சூப்பர் ஸ்டாரின் மகளாக இருந்தாலும் சினிமாவில் டிசைனராக, இயக்குனராக, தயாரிப்பாளராக தனது திறமையை நிரூபித்தவர். அதேபோல விசாகனும், ‘வஞ்சகர் உலகம்’ என்கிற படத்தில் நடித்திருக்கிறார்.

4. விசாகனை அவரது நண்பர்கள் விஷ்கி என அழைக்கிறார்கள். செல்லப் பிராணியாக எப்போதும் நாய்க் குட்டியை தோளில் போட்டுக்கொண்டு சுற்றுகிறவர் அவர். இசைப் பிரியரும் கூட!

5. சவுந்தர்யா, விசாகன் ஆகிய இருவருமே முதல் திருமண பந்தம் சரியாக அமையாமல் விவாகரத்து செய்து கொண்டவர்கள். இப்போது புது வாழ்க்கையில் தடம் பதிக்கிறார்கள்.

6. சவுந்தர்யாவின் திருமண நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றுமே பரம ரகசியமாகத்தான் வைக்கப்பட்டிருக்கின்றன. ரசிகர்கள் கூடுவதை தவிர்க்கவே இந்த ஏற்பாடு. சிரமங்களை தவிர்க்க போலீஸ் பாதுகாப்பு கேட்டும் லதா ரஜினிகாந்த் முறைப்படி மனு கொடுத்திருக்கிறார்.

7. சவுந்தர்யாவை இதற்கு முன்பு அவ்வளவாக ஆன்மீகப் பிரியையாக யாரும் பார்த்ததில்லை. ஆனால் விசாகனுடன் திருமணம் முடிவானதும் கன்னியாகுமரி முதல் திருப்பதி வரை முக்கிய ஆன்மீக தலங்களுக்கு ஒரு ரவுண்ட் போய் வந்தார்.

8. பிப்ரவரி 11-ம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸில் சவுந்தர்யா – விசாகன் திருமணம் நடக்கிறது. மிக முக்கிய குடும்ப நண்பர்களை மட்டுமே திருமணத்திற்கு ரஜினிகாந்த் அழைத்திருக்கிறார். அதே லீலா பேலஸில் பகல் 11 மணி முதல் மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

9. திங்கட்கிழமை மாலையில் அதே லீலா பேலஸில் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கும் சூப்பர் ஸ்டார் ஏற்பாடு செய்திருப்பதாக தெரிகிறது. இதில்தான் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்த இருக்கிறார்கள்.

10. ஏற்கனவே பிப்ரவரி 8-ம் தேதி ஒரு விழா, பிப்ரவரி 11-ம் தேதி முழுக்க விழா இருந்தாலும் பிப்ரவரி 12-ம் தேதியும் ஒரு நிகழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. இது ரஜினிகாந்தின் மக்கள் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் ஆகியோரை அழைத்து உபசரிக்கும் விழா. ரஜினிகாந்தின் ராகவேந்திரா மண்டபத்தில் மதிய விருந்துடன் இந்த நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

ரசிகர் மன்ற நிர்வாகிகள் மத்தியில் சவுந்தர்யாவும் விசாகனும் தோன்றி வாழ்த்து பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.