சவுதியின் ‘டுவிட்டர்’ படை! விமர்சிப்பவர்கள் மீது தாக்குதல்

அரசுக்கு எதிராக சமூக வலைதளமான ‘டுவிட்டரில்’ கருத்து வெளியிடுபவர்களை ஒடுக்க, சவுதி சார்பில் தனிப்படையே செயல்பட்டு வருகிறது.

சவுதி அரேபிய அரசை விமர்சித்த, அந்நாட்டு பத்திரிகையாளர் ஜமால் கஷோகி சந்தேகத்துக்குரிய முறையில் துருக்கியில் கொல்லப்பட்டார். மரணத்திற்கு முன் ஒவ்வொரு நாளும் காலையில், அலைபேசியை சோதனை செய்து, எதிர்ப்பாளர்களை தாக்கும் சவுதி ‘டுவிட்டர்’ படையின் செய்திகளை அலசுவாராம். இவர்கள், அரச குடும்பத்துக்கு எதிராக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து விமர்சனம் செய்பவர்களை பட்டியலிட்டு தெரிவிப்பர். இதற்காக ‘டுவிட்டரில்’ தங்களது உளவாளி ஒருவரை நியமித்து, பயனாளர்களின் தனிப்பட்ட விபரங்களை பெற்றுள்ளது.

சவுதி இளவரசர் சல்மானின் ஆலோசகராக உள்ள சவுத் ஆல் குதானி தலைமையில் ‘டுவிட்டர்’சிறப்புப்படை அமைக்கப்பட்டது. ‘வாட்ஸ்ஆப்பில்’ உள்ள ‘குரூப் சாட்’ போல ஒருங்கிணைப்பு செய்து, ‘டுவிட்டரில்’ விமர்சனம் எழுதுபவர்களை அச்சுறுத்துவதுதான் இவர்களது பணி. இதன்மூலம் எதிர்பாளர்களின் குரல்கள் ஒடுக்கப்பட்டன. ஏதாவது நிறுவன ஊழியர்கள் விமர்சனம் எழுதினால், அவர்களது முதலாளிகள் மூலம் அச்சுறுத்தப்பட்டனர். மாதம் ரூ. 2.20 லட்சம் சம்பளம் என அறிவிக்கப்பட்டு, இப்படைக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இதில் உள்ள இளைஞர்கள் ஒருகட்டத்தில் வெளியேற நினைத்தால், அவர்களும் அச்சுறுத்தப்பட்டனர்.

சவுதி புலனாய்வு துறையை சேர்ந்த அல்ஜாபராஹ் என்பவர் 2013ல் ‘டுவிட்டரில்’ பணிக்கு சேர்ந்துள்ளார். பின் பதவி உயர்வு பெற்று இன்ஜினியரானார். இவர்தான் எதிர்ப்பாளர்களின் ‘டுவிட்டர்’ கணக்கு, ஐ.பி., அட்ரஸ் உள்ளிட்ட விபரங்களை சவுதி அரசுக்கு வழங்கினார் என கூறப்பட்டது. 2015ல் ‘டுவிட்டரில்’ இருந்து விலகிய இவர், தற்போது சவுதி அரசில் பணியாற்றுகிறார்.