சர்ச்சையை கிளப்பிய ‘காட்மேன்’ டீசர் – இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ்

ஓடிடி தளமான ஜீ 5ல் வெளியாகி உள்ள ‘காட்மேன்’ டீசரில் இடம் பெற்றுள்ள காட்சிகளும், வசனங்களும் இந்து மதத்தையும், பிராமண சமூகத்தை அவமதிக்கும் வகையில் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்து மதத்தை அவமதிக்கும் காட்சிகள் சினிமாவிற்கு அடுத்து இப்போது வெப்சீரிஸிலும் தலைதூக்க தொடங்கி உள்ளது.

சினிமாவின் அடுத்த தளம் வெப்சீரிஸ். இதற்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. முன்னணி திரைப்பிரபலங்களும் இதில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் டிவி நிறுவனமான ஜீ டியின் ஓடிடி தளமான ஜீ5யில் ‘காட்மேன்’ என்ற வெப்சீரிஸ் வெளியாக உள்ளது. ஜெயப்பிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இதை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார்.

இந்த சீரிஸின் டீசர் நேற்று(மே 26) வெளியானது. அதில் இந்து மதத்தை அவமதிக்கும் விதமான காட்சிகளும், பிராமணர் சமூகத்தை இழிவுப்படுத்தும் வசனங்களும், உச்சக்கட்ட ஆபாச காட்சிகளும் இடம் பெற்றுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சினிமாவிற்கு தணிக்கை உள்ளது. ஆனால் இந்த வெப்தொடர்களுக்கு தணிக்கை இல்லாததால் படைப்பாளிகள் தங்களின் படைப்பு சுதந்திரம் என்ற பெயரில் ஆபாச காட்சிகளையும், வன்முறை காட்சிகளையும் வலிய புகுத்தி வந்தனர். இப்போது மத ரீதியான சர்ச்சைகளையும் கையில் எடுக்க தொடங்கிவிட்டனர்.

அதிலும் சமீபகாலமாக இந்து மதம் தொடர்பாக இழிவு பேசுவதையும், இந்து மத கடவுள்களை அவமதிக்கும் விதமான காட்சிகளையும் சினிமாக்களில் அதிகம் பார்க்க முடிந்தது. வேண்டுமென்றே சிலர் திரைப்பிரபலங்கள் தங்கள் படங்களின் பப்ளிசிட்டிக்காக இதை திட்டமிட்டு செய்து வருகின்றனர். அந்த வகையில் இப்போது வெப்சீரிஸிலும் இந்து மதத்தை அவமதிக்கும் வகையிலான காட்சிகளையும், வசனங்களையும், குறிப்பிட்ட சமூகத்தை இழிவுப்படுத்தும் விதமான காட்சிகளையும் வைக்க தொடங்கி உள்ளனர். அதற்கு அச்சாரம் அமைத்து கொடுத்துள்ளது காட்மேன் டீசர். 1.12 நிமிட டீசரிலேயே இதுபோன்ற சர்ச்சைகள் என்றால் இன்னும் முழு சீரிஸும் வெளியானால் தேவையில்லாத சர்ச்சையை கிளப்பும்.

இப்போது வெளியாகி உள்ள டீசருக்கே எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்துவிட்டன. ஆன்மிக இந்துக்கட்சியை சேர்ந்த ஜெயம் எஸ்.கே.கோபி கூறுகையில், கடந்த முன்று நாட்களுக்கு முன்பு இந்த வெப்சீரிஸ் குறித்து நான் ஒரு கண்டன பதிவு செய்து இருந்தேன். அப்போது அதை யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

இப்போது இந்த டீசரை பார்த்து நிறைய இந்து உணர்வாளர்கள் என்னை தொடர்பு கொண்டு பேசினார்கள். பல தரப்பட்ட கருத்துகளும் கண்டனங்களையும் தெரிவித்து இருந்தார்கள்..நாங்கள் தனித்தனியே இது குறித்து புகார் அளிக்க போகிறோம் என்று சொன்னார்கள். இந்து மதத்திற்கும், இந்து மத சடங்குகள் மற்றும் இந்து மத வழிபாட்டு முறைகளையும், இந்து தெய்வங்களையும் ஏதாவது வகையில் இழிவுபடுத்தி இருந்தால் நாம் எதிர்வினையை சட்ட ரீதியாக காட்ட வேண்டும். இந்நிகழ்ச்சியை வெளியிட்ட ஜீ தமிழ் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். நாம இத பத்தி பேசுனா இந்த நிகழ்ச்சி பிரபலமாகிவிடும். பிறகு இதை நிறைய பேர் பாப்பாங்கனு முட்டாள்தனமாக யாரும் யோசிக்காமல் இந்துக்கள் ஒன்று சேர வேண்டும். அப்போ தான் இனி யாரும் இந்து மதத்தை பத்தி தப்பா காட்ட பயப்படுவாங்க என தெரிவித்துள்ளார்.