சபாநாயகரை நீக்கக்கோரிய திமுகவின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி

சபாநாயகரை நீக்கக்கோரிய திமுகவின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்தது. ஓ.பி.எஸ் அணியிலுள்ள 12 எம்எல்ஏக்களும் தீர்மானத்தை ஆதரிக்காததாலும், ஆளுங்கட்சிக்கு 122 எம்எல்ஏக்கள் பலம் உள்ளதாலும், தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

சபாநாயகர் தனபாலை அப்பதவியிலிருந்து நீக்ககோரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) முன்மொழிந்தார். இதற்கு திமுக, காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரவு அளித்தன.

அமளியான சட்டப்பேரவை

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் ஆதரவை நிரூபிக்க கடந்த மாதம் தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது எதிர்க்கட்சிகள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தன. ஆனால் சபாநாயகர் அதனை ஏற்கவில்லை.

இதனால் சட்டப்பேரவையில் பெரும் அமளி ஏற்பட்டு, ஸ்டாலின் உட்பட அனைத்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்களுக்கும் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். எதிர்க்கட்சியினர் இல்லாமலே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

நம்பிக்கையில்லா தீர்மானம்

இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின், சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தார். இதுகுறித்த கடிதம் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி சட்டப்பேரவை செயலாளரிடம் வழங்கப்பட்டது. கடிதம் அளித்த 15 நாட்களுக்குள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

இந்நிலையில் இன்று(வியாழக்கிழமை), சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். இதையடுத்து சபாநாயகரை ஏன் நீக்க வேண்டும் என்பது குறித்தும் ஸ்டாலின் பேசினார். இதன்பிறகு நடந்த குரல் வாக்கெடுப்பிலும், எண்ணிக் கணக்கெடுக்கும் முறையிலும் திமுக தோல்வி அடைந்தது.

கருணாநிதி சட்டப்பேரவைக்கு வரமுடியாமல் இருப்பதால் அவரைத் தவிர்த்து எதிர்க்கட்சிகளின் 97 உறுப்பினர்களும் தீர்மானத்தை ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.