சத்தீஸ்கரின் புதிய தலைநகருக்கு வாஜ்பாய் பெயர்

சத்தீஸ்கரில் உருவாக்கப்பட உள்ள புதிய தலைநகருக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவாக அடல்நகர் எனப் பெயர் சூட்டப்படும் என அம்மாநில முதல்வர் ரமன்சிங் தெரிவித்துள்ளார்.

ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவாகச் சத்தீஸ்கரின் 22மாவட்டத் தலைநகரங்களிலும் சிலை நிறுவப்படும். ராய்ப்பூரின் அருகே புதிதாக உருவாக்கப்படும் தலைநகருக்கு அடல்நகர் எனப் பெயர் சூட்டப்படும்.

போக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியதன் நினைவாகச் சத்தீஸ்கர் ஆயுதப்படையின் ஒரு பிரிவு போக்ரான் பட்டாலியன் என அழைக்கப்படும். பிலாஸ்பூர் பல்கலைக்கழகம், ராஜ்நந்தகான் மருத்துவக் கல்லூரி, மார்வா அனல்மின் நிலையம் ஆகியவற்றுக்கும் வாஜ்பாய் பெயர் சூட்டப்படும் என ரமன் சிங் தெரிவித்தார்