சட்டசபை தீர்மானம் செல்லாது – கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கான்

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள சட்ட சபையில், சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற சட்டசபைகளுக்கு அதிகாரம் கிடையாது’ என, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

இந்தப் பிரச்னை குறித்து, கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளதாவது: குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, மாநில சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம், அரசியல் சாசனம் மற்றும் சட்டங்களின்படி செல்லாது. குடியுரிமை வழங்குவது, மத்திய பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதில், மாநில அரசு களுக்கு எந்த பங்கும் இல்லை. சுதந்திரத்துக்குப் பின் நடந்த பிரிவினையால், தென் மாநிலங்கள் பாதிக்கப்படவில்லை. கேரளாவில், சட்டவிரோத அகதிகள் யாரும் இல்லை. இந்த சட்டத்தால் கேரளாவுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அப்படி இருக்கும்போது, எதற்கு அதை ஒரு பிரச்னையாக்குகின்றனர் என்பது புரியவில்லை. இவ்வாறு, அவர் கூறினார். ”தீர்மானம் நிறைவேற்ற சட்டசபைக்கு அதிகாரம் உள்ளது,” என, காங்கிரசைச் சேர்ந்த, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, கூறினார்.

காங்., நிர்வாகிகள் ராஜினாமா:

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதைக் கண்டித்து, கோவாவில், காங்கிரஸ் கட்சியில் இருந்து நான்கு நிர்வாகிகள் விலகியுள்ளனர்.பனாஜி வட்டாரத் தலைவர் பிரசாத் அமோன்கர், வடக்கு கோவா சிறுபான்மையினர் பிரிவு தலைவர் ஜாவேத் ஷேக் உள்பட நான்கு பேர், தங்களுடைய கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

அவர்கள் கூறியதாவது: குடியுரிமை சட்டத்தை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் நாங்களும் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால், உண்மையை புரிந்து கொண்டோம். இந்த சட்டத்தால், யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது. அகதிகளாக வந்துள்ளோருக்கு குடியுரிமை அளிக்கவே, இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. ஆனால், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே, காங்., இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தங்களுடைய அரசியல் காரணங்களுக்காக, பொய் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபடுகின்றனர். நாட்டில் வன்முறைக்கு வித்திட்டுள்ளனர். அதனால், கட்சியில் இருந்து வெளியேறினோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.