சசிகலா – செங்கோட்டையன் உள்ளிட்ட 4 அமைச்சர்கள் சந்திப்பு.. 1 மணிநேரம் ஆலோசனை

பெங்களூரு : சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை தமிழக அமைச்சர்கள் நால்வர் இன்று நேரில் சந்தித்து ஒரு மணிநேரம் பேசி உள்ளனர்.

அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ் ஆகியோர் சசிகலாவை சிறையில் சென்று சந்தித்தனர். தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஒருமணிநேரம் சசிகலா உடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா கடந்த 15ஆம் தேதியன்று மாலை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். 15 நாட்களாக அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் அவரது அக்காள் மகன் டிடிவி தினகரன், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆகியோர் சந்தித்து பேசினர். மறுநாள் அமைச்சர்கள் மூன்று பேர் சசிகலாவை சந்திக்கச் சென்றனர்.

வளர்மதி, கோகுல இந்திரா, அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோரும் சசிகலாவை சந்திக்க அனுமதி கேட்டனர். ஆனால் சிறை நிர்வாகம் அனுமதி மறுக்கவே, அவர்கள் சசிகலாவை சந்திக்காமல் திரும்பினர்.

இந்த நிலையில் இன்று சசிகலாவை சந்திக்க அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ் ஆகியோர் பெங்களூரு சென்றனர். சிறைத்துறை அதிகாரிகளிடம் அனுமதி கோரி கடிதம் அளித்த அமைச்சர்கள், சசிகலாவை சந்தித்தனர். பிற்பகல் 1.30 மணியில் இருந்து 2.30 மணி வரை சசிகலா உடன் அமைச்சர்கள் பேசினர்.

தமிழக அரசியல் நிலவரம் குறித்து அவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. டிடிவி தினகரன் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் தமிழக அமைச்சர்கள் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.