சசிகலா கணவர் நடராஜன் காலமானார்

சசிகலாவின் கணவர் எம்.நடராஜன். கடந்த பல மாதங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில்  இன்று காலை 20.3.18 செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 75.

சென்னை குளோபல் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்த நடராஜன், இன்று 20.3.18 செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.35 மணியளவில் இறந்தார். அவரின் உடல் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் எம்பார்மிங் செய்யப்பட்டு, சென்னை பெசண்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பிறகு அவரின் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு அருகில் உள்ள விளார் கிராமத்திற்கு அஞ்சலிக்காவும் இறுதிச் சடங்கிற்காகவும் எடுத்துச் செல்லப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, கணவரைப் பார்ப்பதற்காக சசிகலா பரோல் கேட்டார். அவருக்கு பரோல் வழங்கப்பட்டது.

இப்போது கணவர் நடராஜன் இறந்துவிட்டதையடுத்து, மீண்டும் பரோல் கேட்டு கணவரின் உடலைப் பார்ப்பதற்கு சசிகலா வருவார் என்றும் அதற்கான பரோல் கேட்டு மனு அளிக்கும் வேலைகள் நடந்துவருகின்றன.

கல்லூரிகாலத்தில் தமிழ் மீதும் திராவிட அரசியல் மீதும் ஈடுபாடு கொண்ட நடராஜன், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றினார்.

பிறகு பி.ஆர்.ஓ பணியில் அதாவது மக்கள் தொடர்பு அதிகாரியாக அரசுப் பணி கிடைத்தது.

இதையடுத்து, தென்னாற்காடு மாவட்டத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த நடராஜன், மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த  சந்திரலேகா ஐஏஎஸ் உடன் அறிமுகமானார். . சந்திரலேகா ஐஏஎஸ் அறிமுகத்தின் மூலம், ஜெயலலிதாவின் அறிமுகம் ஏற்பட, எப்போதுவேண்டுமானாலும் போயஸ்கார்டனுக்கு நடராஜனோ சசிகலாவோ வந்து செல்லும் சுதந்திரம் தரப்பட்டது.

ஒருகட்டத்தில் போயஸ்கார்டனிலேயே வசிக்கத் தொடங்கினார் சசிகலா. நடராஜன் மட்டும் புறக்கணிக்கப்பட்டர். ஆனாலும் அதிமுக கட்சியிலும் சரி, அதிமுக ஆட்சியிலும் சரி, நடராஜனின் செல்வாக்கு எப்போதும் ஓங்கியே இருந்தது. எம்ஜிஆர் இறந்த பிறகு தொடங்கிய நடராஜனின் மறைமுக அரசியல், ஜெயலலிதா இறக்கும் வரை நீடித்தது என்றுதான் சொல்லவேண்டும்.

நடராஜனை யாரும் தொடர்புகொள்ளக்கூடாது என்று பலமுறை ஜெயலலிதா விட்ட அறிக்கைகள் ஒருபக்கம் இருந்தாலும் நடராஜன், சசிகலா, ஜெயலலிதாவுக்கான தொடர்புகள் இருந்து வந்தன என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.