சசிகலா ஒப்புதல் இல்லாமல் கூட்ட முடியாது: பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றால் கடும் நடவடிக்கை – அதிமுக (அம்மா) துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எச்சரிக்கை

திமுகவின் கட்சி விதிகளுக்கு எதிராக வரும் 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக (அம்மா) துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுகவை சீர்குலைக்கும் நோக்கத்துடன் ஓ.பன்னீர்செல்வமும், அவரைச் சார்ந்தவர்களும் செயல்பட்டு வருகின்றனர். அதிமுக பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் முடக்கும் எண்ணத்துடன் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ், இ.மதுசூதனன், எஸ்.செம்மலை ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் கடந்த மார்ச் 23-ம் தேதி அதிமுக பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் யாரும் பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

சசிகலா தலைமையிலான அணிக்கு அதிமுக (அம்மா) என்றும், ஓபிஎஸ் தலைமையிலான அணிக்கு அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) என்றும் தேர்தல் ஆணையம் பெயர் வழங்கியது. அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணைப் பொதுச்செயலாளராக நானும் செயல்பட்டு வருகிறோம். கோடிக்கணக்கான தொண்டர்களின் ஆதரவோடு இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம்.

ஜெயலலிதாவின் கனவான மக்கள் பணி மற்றும் தமிழக மக்களின் வாழ்வாதார உயர்வு மட்டுமே எங்களது இலக்கு. ஆட்சி, அதிகாரம் எங்களுக்கு பிரதானமில்லை.

இந்நிலையில் கடந்த 28-ம் தேதி அதிமுக (அம்மா, புரட்சித்தலைவி அம்மா) என்ற பெயரில் அதிமுக நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், ‘‘பெருவாரியான உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அதிமுக கட்சி விதி 19 பிரிவு 7-ன்படி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் 12-9-2017 காலை 10.35 மணிக்கு நடைபெறும். இதில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில் யாருடைய கையெழுத்தும் இல்லை. என்ன நோக்கத்துக்காக செயற்குழு, பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்ற விவரமும் இல்லை. அதிமுக விதி 20 பிரிவு 7-ன்படி பொதுக்குழுவைுயும், செயற்குழுவையும் பொதுச்செயலாளர் மட்டுமே கூட்ட முடியும். விதி 19 பிரிவு 7-ன்படி பொதுக்குழு உறுப்பினர்களில் 5-ல் ஒரு பகுதியினர் கையெழுத்திட்டு கேட்டுக் கொண்டால் 30 நாள்களுக்குள் பொதுக்குழுவை பொதுச்செயலாளர் கூட்ட வேண்டும். தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிமுக கட்சி விதிகள் இதனையே பறைசாற்றுகின்றன.

சட்டப்பூர்வ அங்கீகாரம்

எனவே, வரும் 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழு, செயற்குழுவுக்கும் அதிமுகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பொதுச்செயலாளர் சசிகலாவால் விதிகளின்படி கூட்டப்படும் பொதுக்குழு, செயற்குழுவுக்கு மட்டுமே சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளது.

கோடிக்கணக்கான அதிமுக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் கெட்ட நோக்கத்தோடும், கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என்ற கூட்டுச் சதியோடும் பொதுக்குழு, செயற்குழு நடக்க இருப்பதாக திட்டமிட்டு செய்தி பரப்பி வருகிறார்கள். அதிமுகவின் உண்மைத் தொண்டர்கள் யாரும் இதனை நம்ப வேண்டாம். அப்படி நடக்கும் எந்தவொரு கூட்டத்திலும் பங்கேற்க வேண்டாம்.

மீறி கலந்துகொள்ளும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள் மீது கட்சி விதிகளின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார்.