சசிகலா எண்ணப்படி ஆட்சி நடந்தால் தமிழகத்தில் விரைவில் தேர்தல்: ஓபிஎஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி தகவல்

தமிழகத்தில் சசிகலா எண்ணப்படி ஆட்சி நடந்தால், விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா (ஓபிஎஸ்) அணி சார்பில், தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியதாவது:

 

அதிமுக அணிகள் இணைந்து செயல்பட, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என 2 கோரிக்கைகளை முன்வைத்தோம்.

 அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரால் 2 அணிகளின் இணைப்பை நிறைவேற்றவும் மற்றும் தடுக்கவும் முடியாது. சசிகலாவின் ஆதரவில் பதவிகள் வாங்கிய இவர்கள், அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். தமிழகத்தில் ஜெயலலிதாவின் எண்ணப்படி ஆட்சி நடந்தால் நாங்கள் ஏற்றுக்கொள்வோம். மாறாக சசிகலா எண்ணப்படி ஆட்சி நடந்தால், விரைவில் சட்டசபை தேர்தல் வரும். இதனை சசி அணியில் உள்ள சட்டப்பேரவை உறுப் பினர்கள் மனக்குமுறலுடன் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியின்போது கிருஷ்ணகிரி எம்.பி. அசோக்குமார், முன்னாள் எம்.பி. பெருமாள் உட்பட பலர் உடனிருந்தனர்.