சசிகலா அதிருப்தி தினகரனை சந்திக்க மறுப்பு?

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் ரத்து, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை, உள்ளிட்ட அடுத்தடுத்த நெருக்கடிகளால் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்த அ.தி.மு.க. அம்மா பிரிவு துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் முடிவு செய்திருந்தார்.

இதற்காக அவர் நேற்று காலை சென்னையில் இருந்து பெங்களூரு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் மாலை 6.30 மணிவரை அவர் பெங் களூரு சிறைக்கு வரவில்லை. சசிகலாவையும் சந்திக்க வில்லை. வேலூர் அருகே போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் அவரால் உரிய நேரத்தில் பெங்களூர் வர இயலவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் அது உண்மையான காரணம் இல்லை என்று பிறகு தெரிய வந்தது.

அவர் தமிழக, கர்நாடக எல்லையில் உள்ள ஆனேக் கல் பகுதியில் உள்ள தனது நண்பரின் பண்ணை வீட்டுக்கு சென்றது கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால். நேற்று இரவு அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றுவிட்டார். அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.

முன்னதாக சசிகலாவை சந்திக்க தினகரன் எந்த நேரத்திலும் வரக்கூடும் என்று கருதி நேற்று மதியம் முதல் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறை அருகே ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகளும், நிருபர்கள், டி.வி. காமிராமேன்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு நின்றனர். இதையடுத்து நேற்று மதியம் 12 மணிக்கு அந்த சிறைச்சாலை பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு சசிகலாவை சந்திக்க தினகரனுக்கு நேரம் ஒதுக்கி கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் டி.டி.வி. தினகரன் அந்த நேரத்துக்கு சிறைக்கு வரவில்லை.

இதையடுத்து மாலை 5.30 மணிக்கு தினகரன் வருவார் என்று அவரது ஆதரவாளர்கள் சிறைத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். சிறைத் துறையினரும் அதற்கு அனுமதி அளித்தனர். ஆனால் 5.30 மணிக்கும் தினகரன் வரவில்லை.

இதற்கிடையே தமிழக பதிவு எண் கொண்ட ஒரு சொகுசு கார் 2 தடவை பெங்களுர் பரப்பன அக்ரஹாரா சிறைப் பகுதிக்கு வந்தது. அந்த காரில் தினகரன் வந்ததாக தெரிகிறது. ஆனால் அந்த கார் சில நிமிடங்களில் புறப்பட்டு சென்று விட்டது.6 மணிக்கு பிறகு சிறைக்கு உள்ளே பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அதன் பிறகு டி.டி.வி. தினகரன் வந்து சசிகலாவை சந்திக்க இயலாது என்பது உறுதியானது?

இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் திரண்டிருந்த அ.தி.மு.க.வினரும், பத்திரி கையாளர்களும் கலைந்து சென்றனர். அதன் தொடர்ச்சியாக கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டது.

சசிகலாவை திட்டமிட்டப்படி தினகரன் ஏன் சந்தித்து பேசவில்லை என்பதில் நேற்றிரவு மாறுபட்ட கருத்துகள் வெளியானது. ஆர்.கே.நகர் தொகுதியில் ரூ. 89 கோடி பணப்பட்டுவாடா, இரட்டை இலை பெற ரூ.50 கோடி பேரம் என்று அடுத்தடுத்து சிக்கல்கள் உருவாகியுள்ள நிலையில் சசிகலாவுடனான தினகரன் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கருதப்பட்டது.

ஆட்சியிலும், கட்சியிலும் தங்களுக்கு எழுந்துள்ள திடீர் எதிர்ப்பை எப்படி எதிர்கொண்டு சமாளிப்பது என்று சசிகலாவும், தினகரனும் ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த சில தினங்களாக அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் சசிகலா கடும் அதிருப்தி அடைந்துள்ளாராம்.ஆட்சியும், கட்சியும் தன் “பிடி”யில் இருந்து நழுவி வருவதால் அவர் மீள முடியாத அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தினகரனுடனான சந்திப்பை தாமாக தவிர்த்தார் என்று கூறப்படுகிறது.
சசிகலா திடீரென சந்திக்க மறுத்ததால் தினகரன் ஏமாற்றம் அடைந்ததாக தெரிகிறது.