சசிகலா அணிக்கு தொப்பி, ஓபிஎஸ் அணிக்கு இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னங்கள்: தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு

ஆர்.கே.நகர் தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதையடுத்து, சசிகலா அணிக்கு தொப்பி சின்னமும், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னமும் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சசிகலா தரப்பு ஆட்டோ, பேட் மற்றும் தொப்பி ஆகிய சின்னங்களைத் தெரிவு செய்திருந்தது. இந்நிலையில் ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் சசி அணிக்கு ஒதுக்கப்பட்டது, ஆனால் ஆட்டோ சின்னம் வேண்டாம் என்று சசி தரப்பினர் கோரியதையடுத்து தேர்தல் ஆணையம் தொப்பி சின்னத்தை ஒதுக்கியது. மேலும் அதிமுக அம்மா என்று கட்சிப்பெயர் வேண்டுமெனவும் சசி தரப்பினர் சமர்ப்பித்தனர்.

ஓ.பன்னீர்செல்வம் அணி அம்மா அதிமுக என்ற கட்சிப்பெயரை சமர்ப்பித்தது, ஆனால் தேர்தல் ஆணையம் பெயரை மாற்றுமாறு அறிவுறுத்த அதிமுக புரட்சித் தலைவி அம்மா என்று கட்சிப் பெயரை மாற்றியுள்ளது.

இதனையடுத்து ஓபிஎஸ் அணிக்கு இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.

ஆகவே, ஆர்.கே.நகர் தேர்தலில் சசி தரப்பில் போட்டியிடும் டிடிவி தினகரன் தொப்பி சின்னத்திலும், ஓபிஎஸ் தரப்பில் போட்டியிடும் மதுசூதனன் இரட்டை விளக்கு மின்கம்பம்சின்னத்திலும் போட்டியிடுகிறார்கள்.