சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றுவதை கர்நாடக அரசு எதிர்க்கும்.. ஆச்சார்யா அதிரடி

சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றினால் கர்நாடக அரச சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்வேம் என அம்மாநில வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

பெங்களூரூ: சசிகலாவுக்கு தண்டனை வழங்கப்பட்டுவிட்டதால் ஜாமீன் என்ற பேச்சுக்கே இடமில்லை கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார். சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற உத்தரவிட்டால் கர்நாடக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில்ல மனுத்தாக்கல் செய்வோம் என்றும் ஆச்சார்யா கூறியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 14 ஆம் தேதி உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியது. அப்போது சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய 4 ஆண்டுகள் சிறை மற்றும் 10 கோடி ரூபாய் அபாராத தீர்ப்பை உறுதி செய்தது.

இதையடுத்து கடந்த 16ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் மூன்று பேரும் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டு ஒருவாரத்துக்குள் சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

ராப் பகலாக ஆலோசனை

சசிகலாவை தமிழக சிறைக்கு கொண்டுவர வழக்கறிஞர்களிடம் ராப்பகலாக ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழக அரசு தீவிரம்

இருமாநில அரசுகளின் ஒப்புதலுடன் தண்டனைக் கைதிகளை வேறு சிறைக்கு மாற்றலாம் என கூறப்படுகிறது. சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற அவரது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக அரசு தீவிரமாக உள்ளது.

ஆச்சார்யா கடும் எதிர்ப்பு

கர்நாடக அரசும் இதற்கு ஆட்சேபம் தெரிவிக்காது என்று ஏற்கனவே கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி சத்தியநாராயணா கூறியிருந்தார். ஆனால் அவரை தமிழக சிறைக்கு மாற்ற கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் பெங்களுருவில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

சுப்ரீம் கோர்ட்டில் அனுமதி பெறனும்

“பெங்களுரு சிறையில் இருந்து சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற முயற்சி நடப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சசிகலா வழக்கு சுப்ரீம்கோர்ட்டு மேற்பார்வையில் கர்நாடக தனிக்கோர்ட்டில் நடந்த வழக்காகும். எனவே அவரை தமிழக சிறைக்கு மாற்ற சுப்ரீம்கோர்ட்டில் அனுமதி பெற வேண்டும்

எதிர்த்து மனு செய்வோம்

நினைத்தவுடன் அவரை தமிழக சிறைக்கு மாற்ற முடியாது. தமிழக- கர்நாடக அரசுகள் இணைந்து இந்த வி‌ஷயத்தில் முடிவு எடுத்தாலும் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு இல்லாமல் அதை செயல்படுத்த மடியாது. தமிழக சிறைக்கு அவரை மாற்ற உத்தரவிட்டால் நாங்கள் கர்நாடக அரசு தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்வோம்.
ஜாமீன் என்ற பேச்சுக்கே இடமில்லை.

மேலும் சசிகலா மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய அடிப்படை ஆதாரங்கள் எதுவும் கிடையாது. அவருக்கு தண்டனை வழங்கப்பட்டு விட்டதால் ஜாமீன் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.