சசிகலாவை சந்திக்க பெங்களூரு புறப்பட்டார் டிடிவி தினகரன்

சிறையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சந்திப்பதற்காக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் பெங்களூரு புறப்பட்டார். இன்று (திங்கள்கிழமை) பிற்பகல் இந்த சந்திப்பு நடைபெறும் எனத் தெரிகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறை சென்ற பின்னர் கட்சிக்குள் பல்வேறு சலசலப்புகள் ஏற்பட்டன. தினகரனையும் அவரது குடும்பத்தாரையும் கட்சியில் இருந்து ஒதுக்கிவைப்பதாக அதிமுக அம்மா அணி மூத்த அமைச்சர்கள் அறிவித்தது. ஓபிஎஸ் அணியுடன் இணைப்புக்கு 7 பேர் கொண்ட குழு அமைத்தது, அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து சசிகலா பேனர்களை அகற்றியது என பல்வேறு அரசியல் நகர்வுகள் இருந்தன.
இதற்கிடையில் இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான டிடிவி தினகரன் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அண்மையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியான அவர் மீண்டும் கட்சிப் பதவியைத் தொடர்வேன். என்னை யாரும் நீக்கவில்லை. என்னை நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு மட்டுமே இருக்கிறது என்றார்.
கைதாவதற்கு முன்னதாக, “என்னை ஒதுங்கச் சொன்னார்கள் ஒதுங்கிவிட்டேன்” என்றவர் சிறையில் இருந்து வெளிவந்தவுடன் மீண்டும் கட்சிப் பணியைத் தொடர்வேன் எனப் பேசியது மீண்டும் அதிமுகவை விவாதப் பொருளாக்கியுள்ளது.
இந்நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை சந்திப்பதற்காக பெங்களூரு புறப்பட்டுச் சென்றார் டிடிவி.தினகரன். இன்று பிற்பகல் இச்சந்திப்பு நடைபெறுகிறது.
தினகரன் கட்சிப் பணியைத் தொடர்வாரா? கட்சியில் சசிகலா குடும்ப ஆதிக்கம் மீண்டும் தலைதூக்குமா? இரு அணிகள் இணைப்பு கிடப்பில் போடப்படுமா? போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இதற்கிடையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக வழக்குப்பதிவு செய்துள்ள அமலாக்கத்துறை, அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.