சசிகலாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகிறது.

வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது பெங்களூரு தனிக்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர்கள் நான்கு பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து தனிக்கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு, தனிக்கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்ததோடு, நால்வரையும் விடுதலை செய்தது.

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசின் சார்பிலும், தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 7-ந் தேதி இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட  நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்தார். குற்றம்சாட்டப்பட்டவர்களில் மற்றொருவரான சசிகலா முதலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், பின்னர் கடந்த 5-ந் தேதி சட்டசபை அ.தி.மு.க. கட்சியின் தலைவராகவும் (முதல்-அமைச்சர்) தேர்ந்து எடுக்கப்பட்டார். கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க தன்னை அழைக்குமாறும் அவர் உரிமை கோரினார்.

இதற்கிடையே ஆளும் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டதால், ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அவருக்கு இன்னும் அழைப்பு விடுக்கவில்லை.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பினாகி சந்திரகோஷ் தலைமையிலான அமர்வு கடந்த 6-ந் தேதி அறிவித்தது. அதன்படி, நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது. காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் தீர்ப்பு கூறுகிறார்கள். சசிகலாவின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வழக்கு என்பதால் இந்த தீர்ப்பை ஒட்டு மொத்த இந்தியாவே எதிர்பார்த்து காத்திருக்கிறது.