சசிகலாவின் முதலமைச்சர் கனவு தகர்ந்தது: 10 ஆண்டுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது

ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு முதல்-அமைச்சர் பொறுப்பு ஏற்ற ஓ.பன்னீர்செல்வம் கடந்த 5-ந் தேதி ராஜினாமா செய்தார். அதேசமயம் பொதுச்செயலாளரான சசிகலா, முதல்வர் பதவிக்கு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. அதற்கேற்ப, அவர் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து சசிகலா புதிய முதல்-அமைச்சராக விரைவில் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்கினார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்தார். இதனால் தமிழக அரசியலில் திருப்பம் ஏற்பட்டது.

பின்னர் கவர்னர் வித்யாசாகர் ராவை சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக சந்தித்து பேசினார்கள். சசிகலா தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கோரினார். தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்கியதால் தனது அரசு தொடர அனுமதிக்க வேண்டும் என்றும், தனக்கு மெஜாரிட்டி ஆதரவு உள்ளது என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இருதரப்பினரும் ஆட்சிக்கு உரிமை கோரியதால் கவர்னர் வித்யாசாகர் ராவ் சட்டநிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு விரைவில் வர இருந்ததால் அவரை ஆட்சி அமைக்க அழைப்பதில் கவர்னருக்கு தயக்கம் இருந்தது.

அதேசமயம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலர் கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்ததால், அவர்கள் கட்டாயத்தின்பேரில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்தது. அவர்களை சந்தித்த சசிகலா, அவர்களை ஒருங்கிணைப்புடன் இருக்கும்படி கூறி வந்தார். அதேசமயம் சசிகலா முதலமைச்சர் ஆவதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது. எனினும், எப்படியும் முதலமைச்சர் ஆவேன் என ஆவேசமாக பேசிய சசிகலா, தான் நினைத்திருந்தால் ஜெயலலிதா மரணம் அடைந்தபோதே முதலமைச்சர் ஆகியிருக்க முடியும் என்று கூறியிருந்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேரையும் குற்றவாளிகள் என்று அறிவித்த உச்ச நீதிமன்றம், தனிக்கோர்ட்டு நீதிபதி வழங்கிய 4 ஆண்டு தண்டனை மற்றும் தலா 10 கோடி ரூபாய் அபராதத்தை உறுதி செய்தது.

எனவே, இனி அவர் தண்டனைக் காலமான 4 ஆண்டுகளையும் சேர்த்து 10 ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் சசிகலாவின் முதல்வர் கனவு தகர்ந்துள்ளது.