கோவையில் ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலை : 24-ம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில், பிரதிஷ்டை செய்யப்பட உள்ள 112 அடி உயர ஆதியோகி சிவனின் திருமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 24-ம் தேதி திறந்துவைக்கிறார்.

இது தொடர்பாக ஈஷா யோகா மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மனித குலத்துக்கு ஆதியோகி யின் இணையற்ற பங்களிப்பை அங்கீ கரிக்கும் வகையில், உலகிலேயே மிகப் பெரிய திருமுகமாக இது உருவாக் கப்பட்டுள்ளது. யோக விஞ்ஞானத்தில் உள்ள 112 வழிமுறைகளை அங்கீ கரிக்கும் வகையிலும் இது அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திருமுகத்தை திறந்து வைப்பதுடன், உலகெங்கும் நடைபெற உள்ள மகா யோக வேள்வியை பிரதமர் புனித தீமூட்டி தொடங்கிவைக் கிறார். மகா யோக வேள்வி என்பது, ஒரு எளிய யோக பயிற்சியை 10 லட்சம் பேர், ஒவ்வொருவரும் குறைந் தது 100 பேருக்கு கற்றுத்தந்து, அடுத்த மகா சிவராத்திரிக்கு முன்பாக 10 கோடி மக்களுக்கு யோகாவை கொண்டு செல்வதாகும்.

இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம், ஆதியோகி பிரதிஷ்டை நிகழ்வை ‘இன்கிரெடிபிள் இந்தியா’ பிரசாரத்தின் அதிகாரப்பூர்வ சுற்றலாத் தலமாக அறிவித்துள்ளது.

பிரம்மாண்டமாக நடைபெறும் மகா சிவராத்திரி திருவிழாவின் அம்சமாக ஆதியோகி திருவுருவம் திறக்கப்பட உள்ளது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் சிறப்புப் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரும் 24-ம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்கி, மறுநாள் காலை 6 மணிக்கு நிறைவடையும். நள்ளிரவு தியானம், ஜக்கி வாசுதேவின் அருளுரை மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்படுகிறது. ஒரே நேரத்தில் 7 மொழிகளில், 23 டிவி சேனல்கள் மற்றும் பல்வேறு ஆன்லைன் தளங்களில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட உள்ளது.

கலை நிகழ்ச்சிகள்

மகா சிவராத்திரிக்கு முன்னதாக, பிரசித்தி பெற்ற கலைஞர்கள் பங்கு பெறும் யக்சா திருவிழா வரும் 21, 22, 23-ம் தேதிகளில் நடைபெறு கிறது.