கோப்பை வென்றது இந்தியா!

ஐதராபாத் டெஸ்டில், அஷ்வின், ரவிந்திர ஜடேஜா ‘சுழலில்’ அசத்த, இந்திய அணி 208 ரன்கள்வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

இந்தியா வந்த வங்கதேச அணி, ஒரே ஒரு டெஸ்ட்போட்டியில் பங்கேற்றது. ஐதராபாத்தில் நடந்தஇப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 687/6 (‘டிக்ளேர்’), வங்கதேசம் 388 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 159/4 (‘டிக்ளேர்’) ரன்கள் எடுத்தது.

பின், 459 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இரண்டாவது இன்னிங்சைதுவக்கிய வங்கதேச அணி, நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், 3 விக்கெட்டுக்கு 103 ரன்கள் எடுத்திருந்தது. மகமதுல்லா (9), சாகிப் அல் ஹசன் (21) அவுட்டாகாமல்இருந்தனர்.

நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சைதொடர்ந்த வங்கதேச அணியின் சாகிப் அல் ஹசன் (22), ஜடேஜாவிடம் சரணடைந்தார். இஷாந்த் சர்மா பந்தை சிக்சருக்கு அனுப்பிய கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் (23), அஷ்வின் ‘சுழலில்’ சிக்கினார்.

பொறுப்பாக ஆடிய மகமதுல்லா, ஜடேஜா வீசிய 50வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விளாசினார். உமேஷ் யாதவ் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய மகமதுல்லா, டெஸ்ட் அரங்கில் தனது 13வது அரைசதமடித்தார். இஷாந்த் ‘வேகத்தில்’ சபிர் ரஹ்மான் (22), மகமதுல்லா (64) வெளியேறினர். ஜடேஜா ‘சுழலில்’ மெகதி ஹசன் மிராஸ் (23), தைஜுல் இஸ்லாம் (6) ஆட்டமிழந்தனர். அஷ்வின் பந்தில் டஸ்கின் அகமது (1) அவுட்டானார்.

இரண்டாவது இன்னிங்சில் வங்கதேச அணி 250 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்விஅடைந்தது. கம்ருல் இஸ்லாம் (3) அவுட்டாகாமல் இருந்தார்.

இந்தியா சார்பில் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா தலா 4, இஷாந்த் சர்மா 2 விக்கெட்கைப்பற்றினர்.

இதன்மூலம் ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1–0 எனக்கைப்பற்றி கோப்பை வென்றது. ஆட்ட நாயகன் விருதை, இரட்டை சதமடித்த இந்தியஅணி கேப்டன் விராத் கோஹ்லி வென்றார்.

சபாஷ் கேப்டன்

இந்தியாவின் அஷ்வின் வீசிய 101வது ஓவரின் 3வது பந்தை வங்கதேசத்தின் டஸ்கின்அகமது எதிர்கொண்டார். பந்தை ‘கேட்ச்’ செய்த இந்திய வீரர்கள், அம்பயரிடம் ‘அவுட்’கோரினர். பந்து, ‘பேட்’ அல்லது ‘பேடில்’ பட்டுச் சென்றதா என்ற குழப்பத்தில் இருந்தஅம்பயர் எராஸ்மஸ், முடிவை மூன்றாவது அம்பயரிடம் விட்டுவிட்டார். பந்து ‘பேடில்’பட்டுச் சென்றது தெரிய வர, மூன்றாவது அம்பயர் ‘அவுட்’ இல்லை என தெரிவித்தார்.

பின் சாமர்த்தியமாக செயல்பட்ட இந்திய அணி கேப்டன் கோஹ்லி, ‘டி.ஆர்.எஸ்.,’ முறையில் எல்.பி.டபிள்யு., கேட்டு ‘அப்பீல்’ செய்தார். ‘டிவி’ ரீப்ளேவில் இது உறுதியாக, ‘அவுட்’ வழங்கப்பட்டது. இப்படி, ஒரு பந்தில் இரண்டு முறை ‘அவுட்’ கேட்கப்பட்டது.

சனுக்கு அஷ்வின் உதவி

ஐதராபாத் டெஸ்ட் முடிந்ததும் வங்கதேச அணியின் இளம் வீரர்கள் கோஹ்லியைசந்தித்தனர்.  இளம் வீரர் மெகதி ஹசன், இந்திய ‘சுழல்’ வீரர் அஷ்வினை சந்தித்து, பவுலிங் குறித்து பல்வேறு ஆலோசனைகளை பெற்றார்.

விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, தொடர்ச்சியாக 6 டெஸ்ட்தொடர்களை கைப்பற்றியது. கடந்த 2015ல் இலங்கைக்கு (2–1) எதிரான டெஸ்ட் தொடரைவென்றது. பின் தென் ஆப்ரிக்கா (3–0, 2015–16), வெஸ்ட் இண்டீஸ் (2–0, 2016), நியூசிலாந்து (3–0, 2016–17), இங்கிலாந்து (4–0, 2016–17), வங்கதேசம் (2016–17) அணிகளுக்கு எதிரானடெஸ்ட் தொடரை வசப்படுத்தியது.

* முன்னதாக தோனி தலைமையிலான இந்திய அணி (2008–10), தொடர்ச்சியாக 5 டெஸ்ட்தொடர்களை கைப்பற்றி இருந்தது.

* இங்கிலாந்து (1984–92), ஆஸ்திரேலிய (2005–08) அணிகள் அதிகபட்சமாக தலா 9 டெஸ்ட்தொடர்களை, தொடர்ச்சியாக கைப்பற்றியுள்ளன.

கோஹ்லி வழிநடத்தும் இந்திய அணி, தொடர்ச்சியாக 19 டெஸ்டில் தோல்வியைசந்திக்காமல் வலம் வருகிறது. கடந்த 2015ல் காலேயில் நடந்த இலங்கைக்கு எதிரானடெஸ்டில் தோல்வி அடைந்த இந்தியா, அதன்பின் விளையாடிய இலங்கை (2 போட்டி), தென் ஆப்ரிக்கா (4), வெஸ்ட் இண்டீஸ் (4), நியூசிலாந்து (3), இங்கிலாந்து (5), வங்கதேசம் (1) அணிகளுக்கு எதிராக ஒரு டெஸ்டில் கூட தோல்வி அடைந்ததில்லை.

* முன்னதாக கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணி (1976–80), தொடர்ச்சியாக 18 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் இருந்தது. இதேபோல கபில் தேவ்தலைமையிலான இந்திய அணி (1985–87), தொடர்ச்சியாக 17 டெஸ்ட் போட்டிகளில்தோல்வியை சந்திக்கவில்லை.

* டெஸ்ட் அரங்கில் அதிகபட்சமாக, வெஸ்ட் இண்டீஸ் அணி (1982–84), தொடர்ச்சியாக 27 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் இருந்தது

இந்திய அணி, சொந்த மண்ணில் கடைசியாக பங்கேற்ற 9 டெஸ்டில் 8ல் வெற்றிபெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான ராஜ்கோட் டெஸ்ட் மட்டும் ‘டிரா’ ஆனது.

இதுவரை 23 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்ட கோஹ்லி, 15 வெற்றி, 2 தோல்வி, 6 ‘டிரா’வை பெற்றுத் தந்துள்ளார். இதன்மூலம் இவர், டெஸ்ட் போட்டிகளில்அதிக வெற்றி தேடித்தந்த இந்திய கேப்டன்கள் பட்டியலில் முகமது அசாரை (14 வெற்றி) முந்தி 3வது இடத்துக்கு முன்னேறினார். முதலிரண்டு இடங்களில் தோனி (27 வெற்றி), கங்குலி (21 வெற்றி) உள்ளனர்.

* இதன்மூலம் 23 டெஸ்டில் அதிக வெற்றி தேடித்தந்த சர்வதேச கேப்டன்கள் பட்டியலில்இரண்டாவது இடத்தை ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், இங்கிலாந்தின் மைக்கேல்வான் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார் கோஹ்லி. இவர்கள் மூவரும் தலா 15 வெற்றிதேடித்தந்துள்ளனர். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாக் (17 வெற்றி) உள்ளார்

டெஸ்ட் அரங்கில், 4வது இன்னிங்சில் 50 அல்லது அதற்கு மேல் விக்கெட் கைப்பற்றியமூன்றாவது இந்திய பவுலர் என்ற பெருமை பெற்றார் அஷ்வின். இவர், 15 டெஸ்டில் 4வது இன்னிங்சில் 50 விக்கெட் வீழ்த்தினார். ஏற்கனவே இந்தியாவின் அனில் கும்ளே (94 விக்., 37 டெஸ்ட்), பிஷன் சிங் பேடி (60 விக்., 26 டெஸ்ட்) இம்மைல்கல்லை எட்டினர்

அடுத்து ஆஸி.,

வங்கதேசத்துக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி முடிந்த நிலையில், இந்திய அணி, அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், வரும் 23ல் புனேயில் துவங்குகிறது. மீதமுள்ளபோட்டிகள் பெங்களூரு (மார்ச் 4–8), ராஞ்சி (மார்ச் 16–20), தரம்சாலா (மார்ச் 25–29) நகரங்களில் நடக்கவுள்ளன.

ஐதராபாத் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 127.5 ஓவர்கள் பேட்டிங் செய்த வங்கதேச அணி, 2வது இன்னிங்சில் 100.3 ஓவர்கள் விளையாடியது. இதன்மூலம் இந்திய மண்ணில் நடந்தடெஸ்டில், 5 ஆண்டுகளுக்கு பின் எதிரணி ஒன்று இரண்டு இன்னிங்சிலும் தலா 100 அல்லது அதற்கு மேற்பட்ட ஓவர்கள் பேட்டிங் செய்த சம்பவம் அரங்கேறியது. கடைசியாக 2012ல் நாக்பூர் நடந்த டெஸ்டில் இங்கிலாந்து அணி (முதல் இன்னிங்சில் 145.5 ஓவர், இரண்டாவது இன்னிங்சில் 154 ஓவர்) இந்த இலக்கை எட்டியது.

COMMENTS

Comments are closed.