
கொரோனா பாதிப்புக்குள்ளான 50% பேர் தப்லிக் மாநாட்டில் பங்கேற்றவர்கள் – மலேசியா
மலேசியாவில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் 50 சதவீதத்தினர் கோலாலம்பூரில் நடைபெற்ற தப்லிக் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என மலேசிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மலேசிய சுகாதார அமைச்சகத்தின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளதாவது:மலேசியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 37 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை, 6,978 ஆக அதிகரித்துள்ளது; 114 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த நோயாளிகளில், 48 சதவீதத்தினர், கோலாலம்பூரில் நடைபெற்ற தப்லிக் மாநாட்டுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது. அம்மாநாட்டில் பங்கேற்றவர்களில், 3,347 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இவர்கள் மூலம் ஐந்து தலைமுறைக்கு நோய்த்தொற்று பரவியுள்ளது. எனவே, மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

‘உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்த கடந்த பிப்ரவரி மாதத்தில், கோலாலம்பூரில் மாநாட்டை நடத்த அனுமதித்திருக்கக் கூடாது. அனுமதி வழங்கிவிட்டு, மாநாட்டில் பங்கேற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவது அபத்தமானது’ என, பல்வேறு தரப்பினரும் மலேசிய அரசை விமர்சித்து வருகின்றனர்.