கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா ஜாமீனில் விடுவிப்பு

தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது செய்யப்பட்டார், ஆனால் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது வெஸ்ட்மின்ஸ்டர் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றம்.

ஸ்காட்லாந்து யார்டு மல்லையா கைது குறித்து தெரிவிக்கும் போது, “மெட்ரோபாலிட்டன் போலீஸின் நாடுகடத்தல் பிரிவு இன்று காலை நாடுகடத்தல் வாரண்டில் உள்ள நபரை (மல்லையா) கைது செய்தது. இந்திய அதிகாரிகள் கோரிக்கைக்கு இணங்க இவர் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று கூறியது.

மேலும், “செண்ட்ரல் லண்டன் போலீஸ் நிலையத்திற்கு இவர் வந்த பிறகு கைது செய்யப்பட்டார். வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றத்தில் இவர் ஆஜர் படுத்தப்படுவார்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை ஊடக ஊதிப்பெருக்கல் என்று ட்வீட் செய்த மல்லையா, “எதிர்பார்த்தது போலவே நாடுகடத்தல் மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் தொடங்கியது” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து இன்று அவர் கைது செய்யப்பட்ட சில மணிநேரங்களிலேயே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அடுத்த மாதம் கோர்ட்டில் ஆஜராகிறார்.

இந்தியா-பிரிட்டன் நாடுகடத்தல் ஒப்பந்தத்தம் செய்து கொள்ளப்பட்ட பிறகு 23 ஆண்டுகளாக இது வரை ஒருவரும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவில்லை. ஆனால் கடந்த ஆண்டு 2002 குஜராத் கலவரங்கள் தொடர்பாக தேடப்பட்டு வந்த சமீர்பாய் வினுபாய் படேல் என்பவரை இந்தியாவிடம் பிரிட்டன் ஒப்படைத்தது.

தற்போது விஜய் மல்லையா இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவாரா என்பது குறித்து வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்ற விசாரணைகளுக்குப் பிறகே தெரியவரும்.