கேரள முதல்வராக மாமனார் & எம்.எல்.ஏ வாக மருமகன்முகமது ரியாஸ்!!

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முதல்வருமான பினராயி விஜயனின் மகள் வீணாவைத் திருமணம் செய்தவர் முகமது ரியாஸ். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தேசியத் தலைவராக முகமது ரியாஸ் உள்ளார்.

கேரள சட்டசபைத் தேர்தலில் கோழிக்கோடு மாவட்டம், பேப்பூர் தொகுதியில் போட்டியிட்ட முகமது ரியாஸ் வெற்றி பெற்றார். தர்மடம் தொகுதியில் போட்டியிட்ட பினராயி விஜயன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கேரள சட்டசபையில் கடந்த காலங்களில் தந்தை – மகன், தந்தை – மகள் என, சட்டசபைக்குள் எம்.எல்.ஏ.,க்களாக வந்துள்ளனர். ஆனால், முதல் முறையாக மாமனார், மருமகன் ஜோடியாக சட்டசபைக்குள் வருவது இதுதான் முதல் முறை.

கடந்த 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் கோழிக்கோடு தொகுதியில் முகமது ரியாஸ் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். இந்தத் தேர்தலில் தந்தை மகன், அரசியல் தலைவர்களின் நெருங்கிய உறவுகள் எனப் போட்டியிட்டாலும் அவர்களில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். மாமனார், மருமகன் ஜோடியாக யாரும் வெற்றி பெறவில்லை.

பாலா தொகுதியில் போட்டியிட்ட இடதுசாரி கூட்டணியில் இருந்த கேரள காங்கிரஸ் மாணி கட்சியின் தலைவர் ஜோஸ் கே.மாணி, திரிகாரிபூர் தொகுதியில் போட்டியிட்ட ஜோஸ் கே.மாணியின் மைத்துனர் எம்.பி.ஜோஸப் இருவரும் தோல்வி அடைந்தனர். கேரள காங்கிரஸ் தலைவர் பி.ஜே.ஜோஸப் தொடுபுழாவில் போட்டியிட்டார். அவரின் மருமகன் ஜோஸப், கொத்தமங்களம் தொகுதியில் போட்டியிட்டார். இருவருமே தோல்வியடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.