கேரளாவை உலுக்கி வரும் தங்க கடத்தல் வழக்கு: சிவசங்கர் சஸ்பெண்ட்

கேரளாவை உலுக்கி வரும் தங்க கடத்தல் வழக்கில் அம்மாநில தகவல் தொழில்நுட்ப முதன்மை செயலாளர் சிவசங்கருக்கு தொடர்பிருப்பது தெரியவந்ததால், இன்று அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஜூலை 5-ம் தேதி சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. அரபு எமிரேட்ஸ் தூதரக அலுவலக முன்னாள் ஊழியர்கள் ஷரீத், கேரள தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிகாரியாக பணியாற்றிய ஸ்வப்னா ஆகியோருக்கு கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. சரித் கைது செய்யப்பட்டார். ஸ்வப்னா மற்றும் அவருடைய கூட்டாளி சந்தீப் நாயர், கர்நாடக மாநிலம் பெங்களூரில் கைது செய்யப்பட்டனர்.

வழக்கை என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கேரள தகவல் தொழில்நுட்ப முதன்மை செயலாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சிவசங்கரிடம் ஒன்பது மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக நடத்திய விசாரணையில், சிவசங்கர் தனக்கு கீழ் பணிபுரியும் அருண் பாலசந்திரன் மூலம், திருவனந்தபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், ஸ்வப்னாவுக்காக வீடு வாடகைக்கு எடுத்து கொடுத்ததுள்ளதும் இந்த வீட்டில் ஸ்வப்னா அடிக்கடி வந்து தங்கி சென்றுள்ளார். இதன் அடிப்படையில், தங்க கடத்தல் விவகாரத்தில் சிவசங்கருக்கு தொடர்பிருப்பதும், தெரியவந்தது. இதையடுத்து இன்று சிவசங்கர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.