கேரளாவில் இளம்பெண் பலாத்காரம்: 5 பாதிரியார்கள் கைது?

கேரளாவில், பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணை மிரட்டி, பலாத்காரம் செய்ததாக, ஐந்து பாதிரியார்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, விடுமுறையில் செல்லும்படி, அந்த ஐந்து பாதிரியார்களுக்கும், சர்ச் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சர்ச் ஒன்றில், கேரளாவை சேர்ந்த நான்கு பேரும், டில்லியைச் சேர்ந்த ஒருவரும், பாதிரியார்களாக உள்ளனர்.

இந்நிலையில், கோட்டயம் மாவட்டம் திருவல்லாவை சேர்ந்த ஒருவர், சர்ச் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதினார். அதில் கூறப்பட்டிருந்ததாவது: ஒருவர் கேட்ட பாவ மன்னிப்பை, மற்றவர்களிடம் சொல்ல கூடாது. ஆனால், என் மனைவி கேட்ட, பாவ மன்னிப்பை வைத்து, அவரை மிரட்டி, ஐந்து பாதிரியார்கள் உட்பட எட்டு பேர், பலாத்காரம் செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதற்கிடையில், சர்ச் நிர்வாகி ஒருவரும், அந்தப் பெண்ணின் கணவரும், பேசிய பேச்சுகள் பதிவான, ‘ஆடியோ சிடி’ வெளியானது. அதில், பெண்ணின் கணவர் கூறியிருந்ததாவது: என் மனைவியை, திருமணத்துக்கு முன்பே, பாதிரியார் ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார். திருமணத்துக்கு பின், இதற்காக, சர்ச்சில், மற்றொரு பாதிரியாரிடம், பாவ மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால், அந்த பாதிரியார், இந்த விவகாரத்தை வெளியில் சொல்வேன் என மிரட்டி, என் மனைவியை பலாத்காரம் செய்துள்ளார். மேலும், மூன்று பாதிரியார்களிடம், அவர், இது பற்றி தெரிவித்துள்ளார், அவர்களும், என் மனைவியை மிரட்டி, பலமுறை பலாத்காரம் செய்துள்ளனர்.

இது பற்றி வெளியில் கூறினால், கொலை செய்து விடுவோம் என, மிரட்டி உள்ளனர். இது பற்றி, எனக்கு இப்போதுதான் தெரிய வந்தது. இவ்வாறு அதில், அந்த பெண்ணின் கணவர் கூறியுள்ளார். இதுகுறித்து சர்ச் தரப்பில், விசாரணைக்குபின் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்து பாதிரியார்களும், விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளனர்.

பெண்ணின் தரப்பிலும், போலீசில் இதுவரை புகார் செய்யப்படவில்லை. எனினும், சமூக வலைதளங்களில், இந்த செய்தி வெளியாகியுள்ளதையடுத்து, பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பெண் தரப்பில், போலீசில் புகார் செய்யப்படும் என, தெரிகிறது. அதனால், ஐந்து பாதிரியார்களும் கைது செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.