கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி தீடிரெனெ விலகியது ஏன்? நெருங்கிய நண்பர் விளக்கம்

புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனும் உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளங்களையும் கொண்டுள்ள தோனி,  நேற்று யாரும் எதிர்பாராத வகையில் இந்திய ஒருநாள் மற்றும்  20 ஓவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.  ஒரு வீரராக தொடர்ந்து விளையாட தயராக இருப்பதாகவும் தோனி தெரிவித்துள்ளார். கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக தோனி அறிவித்துள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சமீப காலமாக டோனியின் ஆட்டத்திறன் சிறப்பாக இல்லை என்று விமர்சனங்கள் எழுந்ததும், கேப்டனாகவும் விராட் கோலி சிறப்பாக செயல்படுவதன் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியின் காரணமாக தோனி, கேப்டன் பொறுப்பில் இருந்து விலகும் முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில்,  தோனியின் முடிவு திடீரென எடுக்கப்பட்டது அல்ல என்று அவரது நெருங்கிய நண்பர் விளக்கம் அளித்துள்ளார். தோனியின் நெருங்கிய நண்பரும் நம்பிக்கைக்குரியவருமான அருண் பாண்டே இது பற்றி கூறியதாவது:- “ இது போன்ற முடிவுகளை  ஒருநாள் இரவில் எடுக்க முடியாது. இது நன்கு சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவு. கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி ஒரு வீரராகவும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆகவும் செயல்பட இதுதான் சரியான தருண ம் என்று கருதிய தோனி, நன்கு ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளார்.
வரும் காலத்துக்குரிய அடுத்த உலககோப்பைக்குரிய அணியை உருவாக்கியுள்ளதாக தோனி நினைத்திருக்க கூடும். ஒரு விஷயத்தையே பற்றியிருக்கும் நபர் அல்ல தோனி. அவரைப்பொறுத்தவரை அணியின் நலன் தான் முக்கியம்” என்றார்.  அருண் பாண்டே தோனியின் வணிகம் சார்ந்த விஷயங்களையும் மேலாண்மை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கேப்டன் பொறுப்பில் தோனி சாதித்தவை:-
35 வயதான டோனி, 2007–ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையையும், 2011–ம் ஆண்டு ஒரு நாள் போட்டி (50 ஓவர்) உலக கோப்பையையும் இந்தியாவுக்கு வென்றுத்தந்த மகத்தான சாதனையாளர். மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையையும் 2013–ம் ஆண்டு இவரது தலைமையில் இந்திய அணி ருசித்துள்ளது. ஐ.சி.சி.யின் இந்த மூன்று பெரிய போட்டிகளிலும் மகுடம் சூடிய ஒரே கேப்டன் என்ற அரிய பெருமைக்குரியவர் டோனி ஆவார். தோனியின் தலைமையின் கீழ் இந்திய அணி டெஸ்ட் அரங்கிலும் நம்பர் 1 இடத்தை பெற்று அசத்தியது. இது தவிர, ஐபிஎல் கோப்பைகள் , சாம்பியன்ஸ் லீக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது. இந்திய அணி மட்டும் அல்லாது உலகம் முழுவதும் வெற்றிக்கேப்டனாக வலம் வந்த வீரர்கள் பட்டியலில் தோனியின் பெயரும் கிரிக்கெட் விமர்சர்களால் உச்சரிக்கப்படுகிறது.