கேட்டை திறந்து பேட்டியளித்தால் அதனை தலைப்பு செய்தியாக போடுவதா ? திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை ராயபுரத்தில் திமுக நிர்வாகி இல்லத்திருமண விழாவில் ஸ்டாலின் பங்கேற்றார். அவர் பேசியதாவது: டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக ஜெயகுமார் சரணடைந்துள்ளார். தவறாக நினைக்க வேண்டாம் அது புரோக்கர் ஜெயகுமார். ஆனால், அந்த துறை சார்ந்த அமைச்சரான ஜெயகுமார், முறைகேடு தொடர்பாக பதவி விலக வேண்டும். ஆன்மிகவாதிகள் என்னோடு இருப்பது எனக்கும் பெருமைதான். ஆனால் சிலர் எங்களை ஹிந்து மதத்தை எதிரானவர்களாக காட்ட முயற்சிக்கின்றனர்.

ஹிந்து எனக்கூறி திமுக.,வை வீட்டிற்கு அனுப்பிவிட நினைக்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது. ஊடகங்கள் உண்மை செய்தியை மறைக்கின்றன. ஆனால் மக்கள் உண்மையை அறிந்து திமுக பக்கம் நிற்கிறார்கள். யாராவது கேட்டை திறந்து வாசலில் வந்து பேட்டி கொடுத்தால், அதை பிளாஸ் நியூஸ் போடுகின்றனர். பேட்டி கொடுத்துவிட்டு அவர் சூட்டிங் சென்று விடுகிறார். ஆனால், அவரின் பேட்டிக்கு தான் இப்போது முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதை தான் தலைப்பு செய்தியாக போடுகின்றனர். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.