கொடநாடு காவலாளி கொலை: உண்மையான காரணத்தை அரசு விளக்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்

கொடநாடு பங்களாக காவலாளி கொலை தொடர்பாக மக்களிடம் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கும், பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு இருக்கிறது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாக காவலாளி ஓம்பகதூர் என்பவர் கடந்த 23-ம் தேதி நள்ளிரவு கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி தமிழகத்தையே உலுக்கி எடுத்திருக்கிறது. குறிப்பாக அதிமுக நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் பெரும் பதட்டத்தை உண்டாக்கியிருக்கிறது.

நள்ளிரவில் பல வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் ஜெயலலிதா பங்களா என்று தெரிந்தே, அத்துமீறி உள்ளே நுழைந்து, அவர்களைத் தடுத்த காவலாளியைக் கொலை செய்துவிட்டு, பல சூட்கேஸ்களில் ஆவணங்களை அள்ளிச் சென்றதாக பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன.

மக்களால் இன்றும் போற்றிப் புகழகப்படும் ஒரு சக்திவாய்ந்த முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் பங்களாவிலேயே, மிகவும் துணிச்சலாக நடைபெற்ற இந்த கொலைச் சம்பவம், தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு முறையாகப் பராமரிக்கப்படவில்லையோ என்ற அச்சத்தை தமிழக மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழக மக்களிடம் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கும், பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்க வேண்டிய பொறுப்பும், இக்கொலைக்கு உண்மையான காரணம் என்ன என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டிய கடமையும், தமிழக அரசுக்கு இருக்கிறது என்பதில் அலட்சியமாக இருந்துவிட வேண்டாம்.

இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுப்பதோடு, இனி எப்போதும் முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கு சிறு குன்றுமணி அளவுகூட குறைவு ஏற்பட்டுவிடாமல் காக்கின்ற பெரும் பொறுப்பும் இந்த அரசுக்கு இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.