கூவத்தூர் தனியார் விடுதியில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தனியாக பிரிப்பு? – தம்பிதுரை சமாதான பேச்சு

தமிழக முதல்வராக பதவியேற் றுள்ள எடப்பாடி பழனிசாமி, சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் தெரிவித்துள்ளதால், கூவத்தூர் விடுதியில் அதிருப்தி எம்எல்ஏக் களை, தனியாக பிரித்து அவர் களைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிருப்தி எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் யாருக்கு வாக்களிப்பார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக எம்எல்ஏக்களிடம் ஆதரவு பெறுவதற்காக, காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கூவத்தூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் சசிகலா தரப்பு எம்எல்ஏக்கள் கடந்த 8-ம் தேதி இரவு முதல் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதிமுகவில் நடைபெற்று வரும் அரசியல் மாற்றங்களால் கூவத்தூர் விடுதி தினமும் பரபரப்பாக இருந்து வருகிறது. இந்நிலையில், அதிமுக சட்டப் பேரவைக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய் யப்பட்டதை அடுத்து அவர் நேற்று முன்தினம் மாலை முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். பதவியேற்பில் கலந்துகொண்ட சசிகலா தரப்பு அதிமுக எம்எல்ஏக் களில் சிலர் நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் கூவத்தூர் விடுதிக்குத் திரும்பினர்.

கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களில் 20-க்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிருப்தியில் உள்ளனர் என்றும் அவர்கள் முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வில்லை என்றும் கூறப்படுகிறது.

அவர்களைச் சமாதானப்படுத்துவதற்காக மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை நேற்று காலை கூவத்தூர் விடுதிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

அதிருப்தி தெரிவித்து வரும் எம்எல்ஏக்கள் மட்டும் விடுதிக்கு பின்னால் கடல் பகுதியில் தீவு போல் உள்ள ஒரு பகுதியில் உள்ள விடுதியில் தனியே தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கின்றனர். அப்பகுதிக்கு சென்ற தம்பிதுரை, அதிருப்தி எம்எல்ஏக்களுடன் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதாக வும், ஆனால் அதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்ட தாகவும் கூறப்படுகிறது.

“சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை பன்னீர்செல்வத்தின் மூலம்தான் நாங்கள் பெற்றோம். தற்போது, அவருக்கு எதிராக செயல்படுவதில் எங்களுக்கு துளியும் விருப்ப மில்லை” என அதிருப்தி எம்எல்ஏக் கள் தெரிவித்து விட்டதாகக் கூறப் படுகிறது. இதனால் அவர்களைச் சமாதானப்படுத் தும் முயற்சியில் தம்பிதுரைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படு கிறது.

படகில் பயணம்

அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள தீவு போன்று உள்ள பகுதியில் உள்ள விடுதிக்கு படகில்தான் செல்ல முடியும். கடந்த 3 நாட்களாக படகுகளில் சில அதிமுகவினர் போவதும் வருவதுமாக உள்ளனர். அங்கு உள்ள விடுதிக்கு கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் படகு மூலம் உணவுப் பாத்திரங்களை அங்கு கொண்டு சென்றதாக அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் சிலர் தெரிவித்தனர்.