கூட்டமைப்பு தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகளை ஒதுக்கிவிட்டு அரசாங்கத்தை காப்பாற்றும் பயணத்தில் இணைந்து பயணிக்கின்றது : கொழும்பு பேட்டியில் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறுகின்றார்

அரசாங்கத்துடன் இணக்கமாக செயற்பட்டு வருகின்றோம் என்று கூறிக்கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் வடக்குகிழக்கு அபிவிருத்தி தொடர்பான செயலணியில் புறந்தள்ளிவிட்டு தன்னுடைய அமைச்சர்களையும் முப்படைத்தளபதிகளையும் ஜனாதிபதி உள்வாங்கியதுடன், இன்று கூட்டமைப்பின் உறுப்பினர்களை செயலணியின் கூட்டத்துக்கு அழைத்திருப்பது தமிழ் மக்கள் மத்தியிலும் எங்கள் மத்தியிலும் பல கேள்விகளை எழுப்புகிறது என்று தெரிவித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை கொண்டு செல்வதற்காக கூட்டமைப்பு தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை ஒதுக்கி வைத்துவிட்டு அரசாங்கத்தை காப்பாற்றும் பயணத்தில் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்;கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

கேள்வி: ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் பிரதான விடயமாக இருந்து வந்த புதிய அரசியல் சாசனம் இன்றைய அரசியல் நிலைவரத்தின்படி தமிழ்மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கிறீர்களா?

பதில்: புதிய அரசியல் சாசனம் ஆரம்பத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. அதில் மூன்று விடயங்கள் உள்ளடக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக இல்லாதொழிப்பது; தேர்தல் முறையில் மாற்றம்; இனப்பிரச்சினைக்கு தீர்வு. இவை தான் அந்த மூன்று விடயங்களும். இவற்றில் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயம் சம்பந்தமாக நீண்ட பேச்சுகள் இடம்பெற்று, இடைக்கால அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டு, அந்த இடைக்கால அறிக்கை சம்பந்தமாக பாராளுமன்றத்தில் விவாதமொன்றும் நடைபெற்றிருந்தது. இந்த இடைக்கால அறிக்கையில் கட்சிகள் ஒவ்வொன்றினதும் பின்னிணைப்புகளும் சேர்க்கப்பட்டிருந்தன. மேற்படி பின்னிணைப்புகளில் இடைக்கால அறிக்கையில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த விடயங்கள் அனைத்தும் மீளப் பெறப்பட்ட வகையில் அமைந்திருந்தது.

புதிய அரசியல் சாசனம் என்பது குறைந்தபட்சம் சமஷ்டி அடிப்படையைக் கொண்டதாக இருக்க வேண்டும்; வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டதாக இருக்க வேண்டும் சமூக, பொருளாதார அபிவிருத்திகளை முழுமையாக ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும் போன்ற விடயங்களை தமிழ் மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் மேற்படி விடயங்கள் எவையும் புதிய அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்படவில்லை என்பதை கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. ”சகல சிங்களக் கட்சிகளும் இணைந்து புதிய அரசியல் சாசனத்தைக் கொண்டுவரவிருப்பதால் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற அளவுக்கு இதில் விடயங்கள் இருக்காது” என்று சுமந்திரன் கூறியிருக்கிறார்.

ஆரம்பத்தில் புதிய அரசியல் சாசனத்தில் சமஷ்டி உள்ளடக்கப்பட்டிருக்கிறது, என்று கூறிவந்த சுமந்திரன், தற்பொழுது இவ்வாறு கூறுகிறார். அந்த அடிப்படையில் பார்க்கின்ற பொழுது புதிய அரசியல் சாசனம் வருமா? வராதா? என்பதற்கு அப்பால் இந்த சாசனமும் தமிழ் மக்களுடைய பிரச்சினையைத் தீர்க்கக் கூடியதொன்றல்ல என்பது தெளிவாகிறது.

கேள்வி: இன்று ஏற்பட்டிருக்கின்ற அரசியல் திருப்புமுனைகளுக்கு மத்தியில் புதிய அரசியல் சாசனம் வரும் என நம்புகிறீர்களா?

பதில்: அது கேள்வியாகவே இருக்கிறது. ஏனெனில், மாகாண சபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் என 2019, 2020 களில் நாடு மூன்று தேர்தல்களைச் சந்திக்கவிருக்கிறது. இந்தத் தேர்தல்களில் சிங்கள மக்களுடைய அதிகபட்ச வாக்குகளைப் பெறவேண்டுமாகவிருந்தால் தமிழ் மக்களுக்கான உரிமைகளை கொடுக்கும் பட்சத்தில், அது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் ஜனாதிபதியும் பிரதமரும் அந்த விடயத்தில் சற்று பின்னிற்கவே முயல்வார்கள். அந்த அடிப்படையில் பார்க்கின்ற பொழுது இந்த கருமம் ஒரு ஏமாற்றுத்தனமான
நடவடிக்கையாகவே சென்று கொண்டிருக்கிறது.

ஐ.நா. சபையில் காணப்படுகின்ற அழுத்தங்களிலிருந்து தப்பிப்பதற்காகவே இடைக்கிடையாவது புதிய அரசியல் சாசனம் தூசிதட்டி எடுக்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா. சபையில் ஈழத்தமிழர்களுடைய விவகாரம் மீண்டும் எடுக்கப்படவிருக்கிறது. இலங்கை ஏற்கனவே ஐ.நா. சபையில் ஒத்துக் கொண்ட விடயங்களில் நடந்திருப்பவை எவை? நடக்காதவை எவை? என்பது சம்பந்தமாக ஆராயப்படவிருக்கிறது. எனவே அங்கு ஏற்படவிருக்கின்ற அழுத்தங்களைச் சமாளிக்கும் வகையிலேயே புதிய அரசியல் சாசனத்தை இடைக்கிடையாவது தூசிதட்டி எடுக்கிறார்களே தவிர, அது முழுமை பெற்று வரும் என்பதற்கான நம்பிக்கை துளியளவும் இல்லை.

கேள்வி: தமிழருடைய இன்றைய அரசியல் மேடையில் மிகமுக்கியமான பேசு பொருளாக ஜனாதிபதி அமைத்திருக்கின்ற ”வடகிழக்கிற்கான அபிவிருத்தி செயலணி” இருந்து வருகிறது. இந்த செயலணி தமிழ் மக்களுக்கு பிரயோசனமுள்ளதாக இருக்கும் என எதிர்ப்பார்க்கிறீர்களா?

பதில்: ஜனாதிபதி உருவாக்கிய மேற்படி செயலணியில் 48 உறுப்பினர்கள்
சிங்கள முஸ்லிம் அமைச்சர்கள், அவர்களுடைய செயலாளர்கள் வடமாகாண முதலமைச்சர், வடக்கு கிழக்கு மாகாணங்களின் பிரதான செயலாளர்கள், முப்படைத்தளபதிகள் ஆகியோர் இந்த செயலணியில் உள்ளடக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், வடக்கு கிழக்கிலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இந்த செயலணியில் உள்வாங்கப்படவில்லை. அதேபோல் மாகாண அமைச்சர்கள் எவரும் உள்வாங்கப்படவில்லை.

இன்றைய அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்கமாக பயணிப்பதாக கூட்டமைப்பே கூறிவருகின்ற சூழ்நிலையில், ஜனாதிபதி என்ன காரணத்திற்காக மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அனைவரையும் புறந்தள்ளிவிட்டு, முப்படைத்தளபதிகளையும், தன்னுடைய அமைச்சர்களையும், செயலாளர்களையும் உள்ளடக்கிய செயலணியை உருவாக்கினார் என்ற கேள்வி எழுகிறது. வடக்கு, கிழக்கில் அபிவிருத்திப் பணிகளை செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி முழுமனதுடன் எண்ணியிருந்தால் அவர் அங்கு தெரிவு செய்யப்பட்டிருந்த மக்கள் பிரதிநிதிகளுக்கே அந்த செயலணியில் முன்னுரிமை கொடுத்திருப்பார்.

வட, கிழக்கின் அபிவிருத்தியில் ஜனாதிபதி முழுமையான அக்கறையுடையவராக இருந்திருந்தால், செயலணியை அமைக்கின்ற பொழுது வட கிழக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கே முக்கியத்துவம் கொடுத்திருப்பார். ஆனால், அதிலிருந்து தவறி தான் விரும்பியவர்களை மத்தியிலிருந்து ஜனாதிபதி தன்னுடைய செயலணிக்கு கொண்டுவந்துவிட்டு
அந்த செயலணியூடாக அபிவிருத்தி பற்றிப் பேசுவது எந்தவிதத்தில் சரியானது என்று புரியவில்லை.

நீண்டகால போராட்டங்கள், நீண்ட கால கோரிக்கைகள் போன்றவற்றை இன்றும் புறந்தள்ளிவிட்டு அரசாங்கம் செயற்படுகிறது என்றால் அடிப்படையில் ஏதோவொரு குறைபாடு அவர்களுக்குள் இருப்பதாகவே தோன்றுகின்றது.

கேள்வி: வட கிழக்கு அபிவிருத்தி செயலணி கூட்டத்திற்கான அழைப்பை ஏற்க வேண்டாம் என்று வட மாகாண முதலமைச்சர் கூட்டமைப்புக்கு விடுத்த கோரிக்கையை கூட்டமைப்பு நிராகரித்திருக்கிறதே. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில்: முதலமைச்சர் விடுத்த கோரிக்கை நியாயமானது. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை அண்மையில் வேலையில்லா இளைஞர் யுவதிகள் சந்திக்கச் சென்ற வேளையில், ”வேலைவாய்ப்புகள் பற்றி என்னால் தற்பொழுது பேச முடியாது, எங்களுக்கு அரசியல் சாசனம் தான் முக்கியமானது. அது தொடர்பாகவே நான் தற்பொழுது கவனம் செலுத்திவருகின்றேன். அதைவிடுத்து வேலைவாய்பபு, அபிவிருத்தி தொடர்பில் என்னால் அரசாங்கத்துடன் பேச முடியாது” என்று கூறியிருந்தார். அன்று அவ்வாறு கூறிய சம்பந்தன், இன்று அபிவிருத்தி என்று ஜனாதிபதி கூறியவுடன் தமிழர்களுடைய அரசியல் கோரிக்கைகள் அனைத்தையும் தள்ளிவைத்துவிட்டு 16 பாராளுமன்ற உறுப்பினர்களையும் அபிவிருத்தி செயலணி கூட்டத்துக்குச் செல்லுங்கள் என்று கூறுவதை வைத்துப்பார்க்கும் பொழுது சம்பந்தன் தன்னுடைய அரசியல் சிந்தனையை அடிக்கடி மாற்றுகிறார் என்பதை அவதானிக்கமுடிகிறது. அந்த அடிப்படையில், தான் எதிர்கொள்ளவிருக்கின்ற எதிர்கால தேர்தல்களை மனதில் வைத்தும், ஐ.நா மனித உரிமை பேரவையில் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள கூட்டத்தைக் கருத்தில் கொண்டுமே இந்த நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுக்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. அதைவிட இந்த செயலணியினூடாக எவ்வளவு தூரம் அபிவிருத்திகளை
செய்யப் போகிறார்கள்? எவ்வாறான அபிவிருத்திகளை முன்னெடுக்கப் போகிறார்கள்? யாரிடம் அதற்கான ஆலோசனைகளைப் பெற்றிருக்கிறார்கள் போன்ற கேள்விகளும் எங்கள் மத்தியில் எழுகின்றன.

கேள்வி: அப்படியென்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுகிறது என்று கூறுகிறீர்களா?

பதில்: நிச்சயமாக. அந்தக் கருத்தில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. ஆளும் தரப்பின் நிகழ்ச்சி நிரலுக்குப் பின்னால் கூட்டமைப்பு சென்று கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு எங்களால் மாத்திரமல்ல, பல்வேறுபட்ட சிவில் அமைப்புகளாலும் முன்வைக்கப்பட்டு வருகிறது. அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலைத்தான் கூட்டமைப்பு முன்னெடுத்துச் செல்கின்றது. உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் அரசாங்கத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளிலேயே கூட்டமைப்பு ஈடுபட்டு வருகிறது. தமிழ் மக்களுடைய கோரிக்கைகளை இன்று புறந்தள்ளியிருக்கிறார்கள். தமிழ் மக்களுடைய நியாயமான கோரிக்கைகளை புறந்தள்ளிவிட்டுத்தான் அபிவிருத்தி பற்றி கூட்டமைப்பு பேசுகிறதா? என்ற கேள்வி கூட இன்று எழுகிறது.

கேள்வி: அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கூட்டமைப்புக்கு மிகப்பெரிய பின்னடைவு ஒன்று ஏற்பட்டிருந்தது. இந்தப் பின்னடைவை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில்: வடக்கிலும் கிழக்கிலும் கூட்டமைப்பினுடைய இருப்பு ஆட்டங்கண்டிருக்கிறது. உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டமைப்பிடமிருந்து ஒன்றரை லட்சம் வாக்குகள் வேறு தரப்புகளிடம் சென்றிருக்கிறது. எனவே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பட்டவர்த்தனமாக ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்தியிருக்கிறது. அதாவது, தமிழரசுக்கட்சியும் அதனோடு இணைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு இயக்கமாக உருவாகிக் கொண்டு வருவதை எங்களால் அவதானிக்கக் முடிந்திருக்கிறது.

கூட்டமைப்பு உறுப்பினர்கள் தமிழர்களுடைய கோரிக்கைகளை நிராகரித்துவிட்டு தங்களுடைய சொந்த நலன்களுக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு ஒவ்வொரு உறுப்பினர்கள் மீதும் சுமத்தப்பட்டு வருகிறது. சமஷ்டி, வட கிழக்கு இணைப்பு என்று பல்வேறுபட்ட விடயங்களைப் பேசி வந்த கூட்டமைப்பு உறுப்பினர்கள், இன்று அவை தொடர்பாக பேசுவதை விடுத்து அபிவிருத்தி பற்றிய விடயங்களையே பேசிவருகிறார்கள். இந்த அபிவிருத்திகள் கூட எந்தளவுக்கு நடைமுறைக்கு வரும் என்பது கூட கேள்வியாகத் தான் இருக்கிறது.

அந்த அடிப்படையில் கூட்டமைப்பு மக்கள் மத்தியில் ஒதுக்கப்படும் ஒரு கூட்டாக உருவாகி வருகிறது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

கேள்வி: மாற்றுத்தலைமை பற்றிய பேச்சு அண்மைக்காலங்களில் பேசப்பட்டு வந்திருந்த சூழ்நிலையில், விரைவில் நடைபெறவிருக்கின்ற மாகாண சபைத் தேர்தலில் அந்த மாற்றுத் தலைமை களம் இறங்கும் என எதிர்பார்க்க முடியுமா?

பதில்: மாற்றுத் தலைமை ஒன்று தேவையென்பதை தமிழ் மக்கள் கடந்த இரண்டு வருடங்களாக எதிர்பார்த்த வண்ணமுள்ளதுடன் அதற்கான கோரிக்கைகளையும் விடுத்து வருகிறார்கள். தமிழரசுக்கட்சி மீதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதும் தமிழ்மக்கள் இன்று நம்பிக்கையிழந்து நிற்கிறார்கள். கூட்டமைப்பு தங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றமாட்டார்கள் என்று தமிழ் மக்கள் இன்று எண்ணுகிறார்கள்.

மாற்றுத்தலைமை என்பது தனிப்பட்டதொரு தலைமையா அல்லது கட்சிகளின் கூட்டமைப்பா என்பது கேள்வியாகவே இருந்து வருகிறது. ஆனால் மாற்றுத் தலைமை தொடர்பான பேச்சுகள் தொடர்ந்தும் நடைபெற்றுவருகிறது.

அந்த அடிப்படையில், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் இன்று இருக்கக் கூடிய கூட்டமைப்பு தலைமைக்கு அப்பால் தமிழ் மக்களுக்கு ஒரு சரியான அரசியல் தலைமையை வழங்கக்கூடிய புதியதொரு அணி உருவாகும் என்று நான் எதிர்பார்க்கிறேன். ஓரிரு மாதங்களில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறேன்.

கேள்வி: மாற்றுத்தலைமை அணிக்கான தலைமையை ஏற்கின்ற தகுதி யாரிடம் இருப்பதாக நீங்கள் உணர்கிறீர்கள்?

பதில்: வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தொடர்பாக மக்கள் மத்தியில்
நம்பிக்கையிருக்கிறது. நேர்மையானவர், ஊழலற்றவர், அரசியல் அபிவிருத்தி விடயங்களைக் கையாளக் கூடியவர் என்று மக்கள் மத்தியில் அவர்மீது ஒரு அபிப்பிராயம் இருக்கிறது.

அந்த அடிப்படையில் இன்றைய சூழலில் அவரைத் தலைமையாகக் கொண்ட ஒரு அணி உருவாவதற்கான தேவையிருக்கிறது. அது தொடர்பான பேச்சுகள் தொடர்ந்தும் நடந்து வருகிறது. காலம் வரும் பொழுது அது வெளியில் வரும் என நான் நம்புகின்றேன்.

கேள்வி: முதலமைச்சர் மீதும் சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவருடைய ஐந்து வருட மாகாண சபை ஆட்சிக்காலத்தில் பல விடயங்களை அவர் செய்ய தவறிவிட்டார் போன்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில்: மாகாண சபை என்பது முழுமையான அதிகாரங்களைக் கொண்ட ஒரு சபையல்ல. முதலமைச்சர் நிதியம் என்ற சட்டம் மாகாண சபையால் கொண்டுவரப்பட்டு சபை அதனை ஏகமனதாக ஏற்றுக் கொண்டு அதனை சட்டமாக்குவதற்கு ஆளுநரின் கைக்கு அனுப்பட்ட போதிலும், அது சம்பந்தமாக இதுவரை எந்தப்பதிலும் இல்லை. அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் இன்று புலம் பெயர் மக்களுடைய ஆதரவுடனும் ஏனைய சர்வதேச அமைப்புகளின் ஆதரவுடனும் பல அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்க முடியும். ஆனால் அதற்கு அரசாங்கமும் ஆளுநரும் தடையாக இருக்கிறார்கள். இதேபோன்று பல விடயங்களுக்கு அரசாங்கமும் ஆளுநரும் தடைகளைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் மாகாண சபை அமைச்சர்கள் அனைவரதும் கைகள் கட்டிப் போடப்பட்டிருக்கிறது. மத்திய அரசாங்கம் மாகாண அமைச்சர்களை சுதந்திரமாக இயங்குவதற்கு தடைகளை போட்டுக் கொண்டிருக்கிறது. அதேபோல் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபையினுடைய நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு போதியளவான அதிகாரங்கள் இல்லாத சூழ்நிலையிலும் இருக்கின்ற சொற்பளவிலான அதிகாரங்களுக்குள்ளும் மத்திய அரசாங்கம் மூக்கை நுழைக்கின்ற சூழ்நிலையிலுமே வட மாகாண சபை இயங்கிக் கொண்டிருக்கிறது.

அதேபோல், வடமாகாண சபை என்பது ஏனைய சபைகளைப் போன்று 2030 வருடங்களாக இயங்கும் சபையல்ல. இது புதியதொரு சபை. எனவே அங்கு சில தவறுகள் இடம்பெற வாய்ப்பிருக்கிறது. அவை பெரிய விடயமாக எங்களாலும் மக்களாலும் பார்க்கப்படவில்லை. அந்தத் தவறுகள் அடுத்து வரும் ஆட்சிக் காலத்தில் திருத்தப்பட்டு சிறந்த சபையாக வடமாகாண சபை இயங்கும் என நம்புகின்றேன்