குழந்தைகளை விற்ற கன்னியாஸ்திரிகள் கைது

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் மிஷனரீஸ் ஆப் சேரிட்டி சார்பில் செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகத்தில், பச்சிளம் குழந்தையை தத்தெடுப்பதற்கு ஒரு லட்சம் வரை பணம் வாங்கப்படுவதாக புகார் வந்தது. இதுகுறித்து, விசாரணை நடத்திவரும் ராஞ்சி போலீசார், குழந்தை விற்பனையில் தொடர்பு இருப்பதாக அறக்கட்டளையில் உள்ள 2 கன்னியாஸ்திரிகளை கைது செய்துள்ளனர்.
ராஞ்சியில் உள்ள இந்த அறக்கட்டளை காப்பகம், திருமணம் ஆகாமல் சிறு வயதிலேயே தாயான சிறுமிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இந்த காப்பகத்தில் 11 கர்ப்பிணி சிறுமிகளும், 75 மாற்றுத் திறனாளிகளும் இருக்கின்றனர். இந்த சிறுமிகளுக்கு பிறந்த 3 குழந்தைகளை தலா ரூ.50,000 க்கு அறக்கட்டளையின் தலைவியாக உள்ள கன்னியாஸ்திரி கொன்சிலியா, உதவியாளருடன் சேர்ந்த விற்பனை செய்ததாக புகார் எழுந்தது.

இதனையடுத்து, கொன்சிலியா மற்றும் அவரது உதவியாளரான மற்றொரு கன்னியாஸ்திரியையும் போலீசார் கைது செய்துள்ளனர். குழந்தையில்லாத 3 தம்பதிகளுக்கு இந்த குழந்தைகள் விற்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதாகவும், அவர்களின் முகவரிகள் குறித்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.