குமாரசாமி ஆட்சி மூன்று மாதங்கள் கூட நீடிக்காது: எடியூரப்பா

காங்.,ம.ஜ.த., கூட்டணி அரசு மூன்று மாதங்கள் கூட நீடிக்காது என எடியூரப்பா கூறினார்.

கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலில் 104 எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா, சுப்ரீம் கோர்ட் உத்தரவால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து காங்., ம.ஜ.,த கூட்டணி அமைந்தது. ம.ஜ.த.கட்சியைச் சேர்ந்த குமாரசாமி இன்று முதல்வராக பதவியேற்றார். இது குறித்து எடியூரப்பா அளித்த பேட்டி,

தனிப்பெரும் கட்சி பா.ஜ. என்ற முறையில் கவர்னர் ஆட்சி அமைக்க அழைத்தார். இதனை கர்நாடக மக்களும் ஏற்றுக்கொண்டனர். காங்., ம.ஜ.,த., கூட்டணி ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. இந்த கூட்டணி மூன்று மாதங்கள் கூட நீடிக்காது. அதற்குள் காணாமல் போய்விடும். குமாரசாமி பதவியேற்பு விழாவில் பா.ஜ. தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்றார்.