கிறிஸ்தவருக்கு திருமலை பதவி: இந்துக்கள் கொந்தளிப்பு

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவராக கிறிஸ்தவரும் தாய்மாமாவுவான ஒய்.வி.சுப்பாரெட்டியை நியமிக்க ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்துக்களின் புனிதத்தலமான திருமலை தேவஸ்தான தலைவராக ஒரு கிறிஸ்தவர் நியிமிக்கப்படுவது இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெகன் மோகனின் தந்தையும் முன்னாள் முதல்வருமான ராஜசேகர ரெட்டி ஒரு கிறிஸ்தவர். அவரது தாய்மாமாவான சுப்பாரெட்டியும் கிறிஸ்தவர் என தகவல் வெளியானது. ஆனால், இதனை சுப்பாரெட்டி மறுத்துள்ளார். சுப்பாரெட்டியின் நியமனம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. டுவிட்டர்வாசி ஒருவர், சர்ச் அல்லது வாடிகன் பொறுப்பில் ஹிந்து ஒருவரை தலைவராக நியமிக்க முடியுமா ? அது முடியாத போது, ஹிந்து கோவிலில் கிறிஸ்தவரை நியமிப்பது ஏன்? எனக் கேட்டுள்ளார்.

கடந்த 2012ல், ஒரு ஆங்கில டிவி வெளியிட்ட செய்தியில், ரெட்டி சமுதாய ஓட்டுகளை பெற, ஜெகன்மோகன் சார்ந்துள்ள மதத்தை காங்., தேர்தல் பிரச்னையாக்கியது. ஜெகனின் தந்தை ராஜசேகர ரெட்டி , தாத்தா ராஜாரெட்டியும் கிறிஸ்தவர்கள். கடந்த 2009 செப்.,3 ல் செய்தி நிறுவனம் ஒன்று, ராஜசேகர ரெட்டி , நடுத்தர கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர் எனக்கூறியது.

இது குறித்து பி.ஆர்.ஹரன் என்பவர் எழுதிய கட்டுரை ஒன்றில், 2004ல் ராஜசேகர ரெட்டி ஆட்சிக்கு வந்த பிறகு, மாநிலத்தில் கிறிஸ்தவ மத பிரசாரம் அதிகரித்தது. கிராமப்புறங்களில் அதிகளவில் மதமாற்றம் நடந்தது. தேவாலாயங்கள் மற்றும் மிஷினரி அமைப்புகள், மதமாற்ற பிரசாரத்தை சுதந்திரமாக செய்ய அனுமதிக்கப்பட்டது. அந்த அமைப்புகளும், ஹிந்து பக்தர்கள் வந்து செல்லும் பத்ராசலம், சிம்மாசலம், ஸ்ரீசைலம், அஹோபிலம், மங்களகிரி, காளஹஸ்தியில் மத பிரசாரத்தில் ஈடுபட்டனர். திருப்பதியை கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. ராஜசேகர ரெட்டியின் உறவினரும் கள்ள சாராய வியாபாரியுமானவர் திருப்பதி தேவஸ்தான சேர்மன் நியமிக்கப்பட்டதால் நிர்வாகத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்தன. வெளிப்படை தன்மை இல்லை. அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டது. நகை, தங்க காசுகள் மாயமாகின. திருப்பதியில் வேற்று மத பிரசாரம், சமூக விரோதிகள் நடமாட்டம் இருந்தன. திருப்பதி தேவஸ்தானத்தின் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் ராஜசேகர ரெட்டியே பொறுப்பு எனக்கூறியிருந்தார்.
கடந்த 2014 டிச 25ல் ஆங்கில இணையதளம் ஒன்று வெளியிட்ட செய்தியில், ஜெகன் மோகன் மற்றும் அவரது குடும்பத்தினர், கடப்பா மாவட்டம் குலிவெந்துலா நகரில் உள்ள சிஎஸ்ஐ சர்ச்சில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றதாக கூறியுள்ளது. அது குறித்த வீடியோவையும் வெளியிட்டது.
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், 2009 ல் ராஜசேர ரெட்டி, திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தை தவறாக கையாண்டதாகவும், இதனால், அந்த வாரியத்தை கலைக்க வேண்டும் எனக் கூறியதுடன், அவரது மகன், எப்படி ஹிந்துக்களின் புனித தலத்தை கையாள போகிறார் எனக் கேட்டிருந்தார்.

கோயில்களை ஒருங்கிணைத்து , திருமலை திருப்பதி தேவஸ்தானம், 1987 ல் சட்டம் 30 ன், முதல் பிரிவு 2ன் படி உருவாக்கப்பட்டது. அரசு நியமிக்கும் உறுப்பினர்களால் போர்டு டிரஸ்டிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.இதன் தலைமை நிர்வாகி தான் நிர்வாக அதிகாரியாக செயல்படுகிறார். அவருக்கு உதவியாக இரண்டு நிர்வாக அதிகாரிகள், தலைமை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரி, வன பாதுகாப்பு அலுவலர், நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அதிகாரி, தலைமை பொறியாளர் ஆகியோர் இருப்பார்கள். இதனை தவிர்த்து, நிர்வாகத்தின் , பல்வேறு கிளைகளை நிர்வகிக்க அதிகாரிகள் உள்ளனர்.

12 கோவில்கள் மற்றும் அதன் உபகோவில்களை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகிக்கிறது. 14 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். திருமலை திருப்பதியின் அமைதி, புனிதத்தன்மையை காக்க தேவஸ்தானம் செயலாற்றி வருகிறது.திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தை அரசு நடத்த வேண்டும் என மக்கள் விரும்பும் நிலையில், அந்த பணிக்கு உறவினரை நியமிப்பது ஏன் என ஜெகன் மோகனிடம் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அவரது தந்தையின் ஆட்சி காலத்தில், இந்து கோயில் நிர்வாகம் மற்றும் ஹிந்து வாரியங்களில் கிறிஸ்தவர்கள் அதிகளவில் ஊடுருவினர். மீண்டும் அந்த நிலைமை ஏற்படுவது ஹிந்துக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

மசூதிகள், தேவாலாயங்கள், குருத்வாராக்கள் உள்ளிட்ட நிர்வாகங்களை மத்திய அரசோ அல்லது மாநில அரசோ நிர்வகிப்பது இல்லை. அதுபோல், கோவில்களை நிர்வகிக்க, தனி ஒரு அமைப்பை ஏன் உருவாக்கக் கூடாது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பார் என பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், திருமலை தேவஸ்தான உறுப்பினராக இருந்த, இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்த முடிவு குறித்து அவர் கூறும்போது, ”நான் பதவி விலகியதில் அரசியல் ஏதும் இல்லை. முந்தைய அரசால் நாங்கள் நியமிக்கப்பட்டோம். புதிய அரசின் விருப்பம் இன்றி நான் இப்பதவியில் தொடர விரும்பவில்லை. புதிய அரசு விரும்பினால் நான் மீண்டும் பதவி ஏற்க தயார்” என்று கூறி உள்ளார்.