கிரண் மோரேவுக்கு கொரோனா: மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சோதனை

மும்பை இண்டியன்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான கிரண் மோரேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் ஏதுமில்லாத அவர் சென்னையில் தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கான கொரோனா கட்டுப்பாட்டு பயோ பப்பிள் வரம்புக்குள் கிரண் மோரே இருந்தார். மும்பையில் நடந்த ஆயத்த முகாம்களிலும் அவர் பங்கேற்றார். இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, க்ருணாள் பாண்டியா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் இதில் இடம்பெற்றிருந்தனர்.

வரும் 9-ஆம் தேதி தொடங்க இருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்காக அவர்கள் கடந்தவாரம் சென்னைக்கு வந்தனர்.

கிரண் மோரேவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதால், மற்ற வீரர்களின் உடல் நிலையையும் சோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக டெல்லி அணியின் அக்ஸார் பட்டேல், ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் படிக்கல் ஆகியோருக்கு கொரோனோ தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

ஐபிஎல் விதிகளின்படி அறிகுறிகள் அற்ற அல்லது குறைந்த அறிகுறிகளைக் கொண்டவர்கள் குறைந்தது 10 நாள்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கடைசி இரு நாள்களில் கொரோனா இல்லை என்ற சோதனையில் உறுதி செய்யப்பட்ட பிறகே மீண்டும் அணியின் பயோ பப்பிள் வரம்புக்குள் வர முடியும்.

ஐபிஎல் போட்டிகள் வரும் 9-ஆம் தேதி சென்னையில் தொடங்குகின்றன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கும் போட்டிகள், சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, அகமதாபாத், கொல்கத்தா ஆகிய ஆறு நகரங்களில் நடக்கின்றன. பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. மும்பையில் நாளொன்றுக்கு சராசரியாக 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. மும்பை வான்கடே மைதான ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆயினும் திட்டமிட்டபடி மும்பையில் போட்டிகள் நடக்கும் என ஐபிஎல் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.