காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற ஆவடி இளைஞர் கல்வீச்சில் மரணமடைந்தார்

காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற ஆவடி இளைஞர் கல்வீச்சில் மரணமடைந்தார். அவரது உடல் விமானம் மூலம் இன்று இரவு சென்னை கொண்டு வரப்பட உள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாகி வருகிறது காஷ்மீர்.

சென்னை ஆவடி அருகே உள்ள பாலவேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜவேலு. இவர் ஆவடி டாங்க் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவியும், சங்கீதா, திருமணி செல்வம், ரவிகுமார் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.

கோடையை முன்னிட்டு கடந்த 4-ம் தேதி ராஜவேலுவின் குடும்பத்தார் மகன் ரவிக்குமாரை தவிர அனைவரும் சுற்றுலாப் பயணமாக  காஷ்மீர் புறப்பட்டுச் சென்றனர். டெல்லி சென்று அங்கிருந்து விமானம் மூலம் காஷ்மீர் சென்ற அவர்கள் பல இடங்களைச் சுற்றிப் பார்த்தனர்.

நேற்று சுற்றுலாப் பேருந்தில் குல்மார்க் என்ற இடத்தைச் சுற்றிப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் சென்றனர். அந்தப் பகுதி அடங்கியுள்ள புல்காம் மாவட்டத்தில் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. போராட்டக்காரர்கள் போலீஸார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். பின்னர் அவர்கள் சுற்றுலா வாகனத்தின் மீதும் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.

இதில் திருமணியின் கண் மற்றும் நெற்றியில் கற்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்தார், கல்வீச்சில் இன்னொரு பெண்ணும் காயமடைந்தார். இருவரையும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

திருமணி கோமா நிலைக்குச் சென்றவர் நினைவு திரும்பாமலே உயிரிழந்தார். அவரது குடும்பத்தாருக்கு முதல்வர் மெஹபூபா நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். எதிர்க்கட்சித்தலைவர் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திருமணியின் உடலை சென்னை கொண்டு வர ஆகும் அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்வதாக மெஹபூபா அறிவித்துள்ளார்.

மதியம் பிரேதப் பரிசோதனைக்கு பின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு ஆவடியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு பின்னர் இறுதிச் சடங்கு நடக்க உள்ளது. சென்னையில் திருமணியின் குடும்பத்தாரைச் சந்தித்த அரசு அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு சார்பில் திருமணியின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்த திருமணி செல்வத்திற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

உலகத்தில் அனைவரையும் கவரும் சுற்றுலாத்தலமாக விளங்கும் காஷ்மீருக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். காஷ்மீரில் நடக்கும் தொடர் போராட்டம் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை என உமர் அப்துல்லாவும் கண்டித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளை போராட்டக்காரர்கள் தாக்கும் சம்பவம் சமீப காலமாக அதிகமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 30-ம் தேதி கேரளாவிலிருந்து சுற்றுலா வந்த பயணிகள் மீது இதே போன்று கல்வீச்சு சம்பவம் நடந்தது.

ஆனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற இடத்தில் ஏப்.30 இரவு 8 மணி அளவில் நான்கு சுற்றுலா வேனில் வந்த 47 கேரள சுற்றுலாப் பயணிகள் மீது ஒரு கும்பல் சூழ்ந்துகொண்டு கல்வீசித் தாக்கியது. இதில் 7 பேர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து நேற்றைய சம்பவத்தில் திருமணி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.