காவிரி மேலாண்மை வாரியம் விரைவாக அமைக்க இயலாது: நிதின் கட்கரி திட்டவட்டம்

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது போல், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமைப்பது இயலாது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு நேற்று வந்திருந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

”தமிழகம், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் உள்ள தண்ணீர் பிரச்சினை குறித்து மிகுந்த அக்கறையாகவும், எச்சரிக்கையாக மத்திய அரசு இருக்கிறது, தண்ணீர் பிரச்சினையை உணர்வுப்பூர்வமாகவும் அரசு பார்க்கிறது.

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மத்திய அரசு மதிக்கிறது. கர்நாடகமும், தமிழகமும் எங்களுக்கு இரு கண்கள் போன்றவை. இரு மாநிலங்களுக்கும் நீர் என்பது மிக இன்றியமையாத விஷயமாகும்.

நான் ஒரு விவசாயி. மஹாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் குடிநீருக்காகவும், விவசாயப் பாசனத்துக்காவும் தண்ணீர் இல்லாமல் மக்கள் என்ன சிரமப்பட்டார்கள் என்பதை அறிவேன். அங்குதான் ஆயிரக்கணக்காண விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். ஆதலால், தண்ணீர் விஷயத்தில் மிகுந்த அக்கறை எடுத்து, தீர்வு காண்போம்.

அதேசமயம், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது என்பது இயலாது. இந்த வாரியத்தை அமைக்கும் செயல் என்பது எளிதானது அல்ல. இது கடினமான செயலாகும். அதே சமயம், எப்போது அமைக்கப்படும் என்ற கேள்விக்கு எளிதாக பதில் அளிக்க இயலாது.

என்னைப் பொருத்தவரை நான் கையில் எடுத்த அனைத்து திட்டங்களையும் வெற்றிகரமாக முடித்து இருக்கிறேன். ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்பது மிகப் பெரிய பணி. ஆதலால், எந்தவிதமான உறுதியளிப்பும் என்னால் தர இயலாது.

மத்திய அரசு இரு முக்கியத் திட்டங்களை நடைமுறைப்படுத்த ஆர்வமாக இருக்கிறது. கோதாவரி நதி நீரை காவிரிக்கு கொண்டு வருவதும், போலாவரம் திட்டமும் ஆகும். இதன் மூலம் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களின் நீர் தேவையை பூர்த்தி செய்யலாம்.

ஆண்டுதோறும் ஏறக்குறைய 3 ஆயிரம் டிஎம்சி கோதாவரி நதி நீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்த திட்டத்தை செயல்படுத்தி கோதாவரி நீரை, காவிரிக்கு திருப்பினால், குறைந்தபட்சம் 700 டிஎம்சி நீரை சேமிக்க முடியும்.

இரண்டாவதாக ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பிலான போலாவரம் திட்டம். இந்த திட்டமும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும்.

மோட்டார் வாகனச் சட்டம் சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கிறோம். மக்களவையில் சில எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் கூட நிறைவேற்றப்பட்டுவிட்டது.”

இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்.