காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் நோக்கத்திலிருந்து நம்மை திசை திருப்புகிறார்கள்: எச்.ராஜா மீது கமல் குற்றச்சாட்டு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் நோக்கத்திலிருந்து திசை திருப்பும் ஏற்பாடு இது. பெரியாரை மக்கள் பார்த்துக்கொள்வார்கள். காவிரி மேலாண்மை வாரியத்தை நீங்கள் பாருங்கள் என்று கமல் கூறினார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் கமல் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

”பெரியார் பற்றிய கூற்று கீழ்த்தரமானது. சட்ட வல்லுநர்களிடம் கேட்க வேண்டும், அதில் தண்டனையும் உள்ளதா என்று. மற்றபடி பெரியாரின் சிலைக்கு போலீஸார் பாதுகாப்பை விட மக்கள் பார்த்துக்கொள்வார்கள். இது போன்ற கலக வார்த்தைகள் தேவை இல்லை.

முக்கியமாக திசை திருப்பாமல் இருக்க வேண்டும். இலக்கு என்ன என்பது பற்றி பாராமல் திசை திருப்பாமல் இருக்க வேண்டும். எது திசை திருப்பல் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் கெடு கடந்து கொண்டிருக்கிறது என்பதை மறக்கடிக்கச் செய்யும் திசை திருப்பலாகவே இதைப் பார்க்கிறேன். அந்த விவகாரத்திலிருந்து திசை திருப்பவே இது போன்ற செயல்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.

ஆகவே பெரியாரை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது. அந்த உயரம் ரொம்ப அதிகமானது அதை யாரும் தொட்டு விட முடியாது. அதற்கு காவல் கொடுப்பதை விட இப்படி பேசுகிறவர்களுக்கு அரசு பாதுகாப்பு கொடுக்கலாம். அது அவர்களுக்கு தேவைப்படும்.

அந்தப் பாதுகாவலை அவர்கள் அங்கே செய்துகொள்ளட்டும், பெரியார் சிலையையும், கவுரவத்தையும் தமிழகர்கள் காத்துக்கொள்வார்கள். ஆக என்னுடைய வேண்டுகோள் ஊடகங்கள்தான் திசை திருப்பாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

எச்.ராஜாவின் மன்னிப்பை ஏற்றுக்கொள்வீர்களா?

அவர் மன்னிப்பு கேட்டது போல் தெரியவில்லை, வருத்தம் தெரிவித்திருக்கிறார். அவ்வளவுதான். அதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது.

அமைச்சர் ஜெயக்குமார், எச்.ராஜா வருத்தம் தெரிவித்ததால் வழக்கு இல்லை என்கிறாரே?

அம்பு மாதிரி வார்த்தைகள் சொல்வார்கள், கத்தி மாதிரி, துப்பாக்கி மாதிரி நினைத்துப் பாருங்கள் காயம் காயம்தானே.

அட்மின் தான் தவறாக போட்டதாக கூறியுள்ளாரே ராஜா?

வருத்தம் தெரிவித்ததையே நான் ஏற்றுக்கொள்ளவில்லை, இதை நொண்டிச்சாக்கை எப்படி நான் ஏற்றுக்கொள்ள முடியும்.

பெரிய கொந்தளிப்பான சூழ்நிலையை தட்டிக்கழிக்கும் போக்கு போல் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு உள்ளதே?

நான் தட்டிக்கழிப்பது என்பதை இது என்பதாக பார்க்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் விஷயத்தில் தட்டி கழித்துச்செல்கிறார்கள், வைத்த கெடுவை கடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். இவர்களும் அப்படியே கடந்து செல்லலாம் என்று பார்க்கிறார்கள்.

வேலூரில் சிலையை உடைத்த ஒருவரை கட்சியை விட்டு நீக்கி இருக்கிறார்கள், எச்.ராஜா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறீர்களா?

கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்கிறேன்.

உங்கள் வீடு முறையற்ற முறையில் கட்டியதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதே இதை கட்சி ஆரம்பித்ததால் வந்த நெருக்கடியாக பார்க்கிறீர்களா?

அப்படித்தான் பார்க்கிறேன், தவறாக நடந்திருந்தால் என் மீது நடவடிக்கை வருவதை ஏற்றுக்கொள்வேன். எனக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை உண்டு, என் மீது நடவடிக்கை வரும்போதே 7000 பேர் இதே போல் கட்டியுள்ளனர் அவர்கள் மீதும் வரும் என்று நம்புகிறேன்.”

இவ்வாறு கமல் பேசினார்.