காலிஸ்தான் பிரிவினைவாதியுடன் கனடா பிரதமரின் மனைவி புகைப்படம் எடுத்துக் கொண்டதால் சர்ச்சை

இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி, குற்றவாளி என அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஜஸ்பால் அத்வாலுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த 17-ம் தேதியன்று இந்தியாவுக்கு வருகை தந்தார். ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், பஞ்சாப் மாநிலத்துக்கு நேற்று சென்றார். அப்போது, அமிர்தசரஸில் அமைந்துள்ள பொற்கோயிலுக்கு தமது குடும்பத்தினருடன் சென்று அவர் வழிபட்டார். இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கை சந்தித்து ஜஸ்டின் ட்ரூடோ ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பின்போது, காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புக்கு கனடாவிலிருந்து செயல்படும் சில சக்திகள் ஆயுத, நிதியுதவி அளித்து வருவதாக ஜஸ்டின் ட்ரூடோவிடம் அமரீந்தர் சிங் தெரிவித்தார். இந்தியா மட்டுமின்றி உலகின் வேறு எந்தப் பகுதியில் செயல்படும் பிரிவினைவாத அமைப்புகளுக்கும் கனடா ஆதரவளிக்காது என ட்ரூடோ திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் தீவிரவாத ஆதரவாளர் .

ஜஸ்பால், 1986 ம் ஆண்டு பஞ்சாப் அமைச்சர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர். கனடா, ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் காலிஸ்தான் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் பிப்ரவரி 20ம் தேதி நடந்த சினிமா துறை சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கனடா பிரதமர் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி சோபி கிரிகோரும் சென்றிருந்தனர் அப்போது, அங்கு வந்திருந்த பிரிவினைவாதி ஜஸ்பாலுடன், சோபி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

மேலும் டெல்லியில் இன்று கனடா பிரதமர் ட்ரூடோ சார்பில் நடத்தப்படும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க ஜஸ்பாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், அந்த அழைப்பை, கனடா தூதரகம் திரும்ப பெற்றுக் கொண்டதாக தெரிகிறது. எனினும் இதுபற்றி தகவல் ஏதும் தெரிவிக்க கனடா தூதரகம் மறுத்து விட்டது.