கார் சர்ச்சைகளுக்கு நடிகை அமலாபால் மறைமுகமாகப் பதிலடி

நடிகை அமலாபால் ரூ. 1.5 கோடி மதிப்பிலான பென்ஸ் காரை, புதுச்சேரியில் போலி முகவரி அளித்து பதிவு செய்தார். குறைந்த தொகையை சாலை வரியாகச் செலுத்தியுள்ளார் எனப் புகார் எழுந்தது. இதேபோல, புதுவையில் போலி முகவரி கொடுத்து விலை உயர்ந்த கார்களுக்கு குறைந்த சாலை வரியைச் செலுத்தி பலர் மோசடி செய்துள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த புதுச்சேரி போக்குவரத்து செயலருக்கும், காவல்துறை முதுநிலை எஸ்.பி.க்கும் கிரண் பேடி உத்தரவிட்டார். ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக புதுவை மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எப்.ஷாஜஹான் செய்தியாளர்களிடம் கூறும் போது

போக்குவரத்துத் துறை சட்டவிதிகள்படி ஒருவர் ஒரு வாகனத்தை பதிவு செய்ய, வாக்காளர் அட்டை, எல்ஐசி பாலிசி, கடவுச்சீட்டு, பள்ளிச் சான்று, பிறப்புச் சான்று, பிரமாண பத்திரம் ஆகியவற்றை ஆதாரங்களாக தாக்கல் செய்யலாம். இவை இருப்பிடத்தை உறுதி செய்யும். அமலாபால் தனது கையெழுத்துடன் கூடிய பத்திரத்தை தாக்கல் செய்தார். புதுச்சேரி திலாசுபேட்டையில் வாடகை வீட்டில் இருப்பதற்கான இருப்பிடச் சான்றை தாக்கல் செய்துள்ளார். அத்துடன் எல்ஐசி பாலிசி நகலையும் இந்த முகவரியிலிருந்து தந்துள்ளார். இதில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என கூறினார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளார் அமலா பால். அதுவும் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக தன்னை விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இன்ஸ்டகிராமில் பதிவு எழுதி படகுப் பயணம் செய்வது போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

சிலசமயங்களில் இந்த நகர வாழ்க்கையிலிருந்தும் ஊகங்களிலிருந்தும் தப்பி ஓட நினைக்கிறேன். தற்போதைக்குப் படகு சவாரி செய்கிறேன். இதனால் குறைந்தபட்சம் சட்டத்தை மதிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு இல்லை என்று தன் மீதான விமரிசனங்களுக்குக் கிண்டலாகப் பதிவு எழுதியுள்ளார்.