கார்த்தி சிதம்பரத்திற்கு மேலும் 3 நாள் சி.பி.ஐ., காவல்

கடந்த 5 நாட்களாக சி.பி.ஐ.,காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்க முடியாது என டில்லி பாட்டியாலா சிறப்பு கோர்ட் கைவிரித்து விட்டது. மேலும் சி.பி.ஐ., கோரிக்கையை ஏற்று அவரை மேலும் 3 நாள் சி.பி.ஐ., காவலில் வைத்து விசாரிக்கவும் கோர்ட் உத்தரவிட்டது.

ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் மாஜி மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி கைது செய்யபட்டுள்ளார். அன்னிய முதலீட்டு வாரியத்தின் அனுமதி பெற்றுத்தர கார்த்தி தனது தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தினார் என்பது குற்றச்சாட்டு. இதில் சம்பந்தப்பட்ட இந்திராணி முகர்ஜியும், கார்த்தி சிதம்பரம் முன்னிலையில் சி.பி.ஐ., நடத்திய விசாரணையில் ஒத்து கொண்டார். கடந்த 5 நாள் விசாரணயைில் கார்த்தி மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன என சி.பி.ஐ தெரிவிக்கிறது.

குறிப்பாக கார்த்தி சிதம்பரத்தின் மகள் மைனராக இருக்கும் போது அவரது பெயரில் லண்டனில் சொத்து வாங்கினார். என்ற விவரம் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரிடம் கேட்கும் போது போதிய வருமான ஆதாரங்களை காட்ட முடியவில்லை. மேலும் விசாரணை நடத்தப்பட்டபோது முறையான பதிலை அளிக்காமல் இழுத்தடித்துள்ளார். ” உங்கள் பெயர் என்ன ? என்ற கேள்விக்கு – நான் அரசியல்வாதி”- என்ற தொனியில் அவர் பதில் அளித்துள்ளார்.

மூன்று நாள் சி.பி.ஐ., காவலுக்கு பிறகு மீண்டும் வரும் 9ம் தேதி மதியம் 2 மணிக்கு அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.