காரைக்கால், நெடுவாசலில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிர்ப்பு: புதுக்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

காரைக்கால் மற்றும் நெடுவாசலில் இயற்கை எரிவாயு (ஹைட்ரோ கார்பன் வாயு) எடுக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடு வாசலைத் தொடர்ந்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டத்தில் 10 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு காரைக்கால் மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

காரைக்கால் பிராந்தியத்தில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுப்பது தொடர்பாக புதுச்சேரி அரசுக்கு அறிவிப்பு வரவில்லை. கடிதமும் வரவில்லை. இது மத்திய அரசால் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் பகுதி விவசாயிகள் மத்தியில் இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி அரசுக்கு இந்தத் திட்டத்தில் உடன்பாடு இல்லை.

மத்திய அரசிடம் இருந்து காரைக் கால் பகுதியில் வாயு எடுப்பதற்கு கடிதம் வந்தால், ‘இதற்கு எங்களுக்கு உடன்பாடு இல்லை,  ‘இதை ஏற்க மாட்டோம்’ என்று கடிதம் எழுத தயாராக இருக்கிறோம். மாநில அரசு ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்த முடியாது. மத்திய அரசு இத்திட்டத்தை ஆரம்பித்தால் புதுவை மாநில அரசு ஏற்காது. நிச்சயம் அதை எதிர்க்கும் என்றார்.

எம்.எச்.ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திலும், புதுச்சேரியில் காரைக்காலிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல் படுத்த மத்திய அரசு அனுமதித் துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ‘ஹைட்ரோ கார்பன்’ எனும் ‘நீர்கரிம வாயு’ எடுக்க மக்களுடைய ஒப்புதல் இல்லாமலேயே மத்திய அரசு ஜெம் லேபாரட்டரிஸ் என்ற நிறுவனத் துக்கு அனுமதி அளித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கும் மனித உயிர் களுக்கும் கேடு விளைவிக்கும் திட்டத்தை மத்திய பாஜக அரசு தமிழகத்தில் புகுத்த நினைப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத் தும் இந்த திட்டத்தால் விவசாயம் முற்றிலுமாக அழியும் சூழல் உருவாகும். இத்திட்டத்திற்கு எதிராக தமிழக மக்கள் கட்சி வேறுபாடின்றி ஜல்லிக்கட்டு போராட்டம்போல் போராட முன்வர வேண்டும்.

ரவி பச்சமுத்து

ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகாவில் உள்ள நெடுவாசல் மற்றும் வடகாடு ஆகிய பகுதிகளில் ஹாட்ரோ கார்பன் எரிவாயுவை எடுக்க, துபாயைச் சேர்ந்த ஜெம் என்ற நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அறிவியல் முறையில் ஹைட்ரோ கார்பனை பிரித்தெடுக்கும் முறையை கையா ளும்போது, இயற்கை வளம் முற்றிலும் பாதிக்கப்படும். அதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.

புதுக்கோட்டையில்..

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் எரிவாயு எடுத்தால் அப்பகுதியில் நீர், நிலவளம் கடுமையாக பாதிக்கப்படும் என கூறி, இத்திட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி புதுக்கோட்டை மன்னர் அரசுக் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்பு களைப் புறக்கணித்து, கல்லூரி வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மாணவர்கள் முழக்கமிட்டனர். பின்னர், போலீஸார் சமாதானம் செய்ததைத் தொடர்ந்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.