காத்திருந்த கார்த்திகை மாதம் மீண்டும் வந்து மகத்தான மாவீரர்களை நினைவூட்டுகின்றது

கார்த்திகை மாதத்தை எமது மண்ணின் விடுதலையை நோக்கிய போராட்டத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்காக அர்ப்பணம் செய்தார்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினரும் அதன் தலைவர் பிரபாகரன் அவர்களும். தமிழீழ மண்ணுக்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் வீரர்களை நாம் நினைவு கூர்ந்து அவர்களுக்கு மதிப்பளிக்கும் புனித நாள். கல்லறையில் துயில் கொள்ளப் போய்விட்ட அந்த மாவீர தெய்வங்களது காலடிகளில் மலர் சொரிந்து அவர்களை வணங்கும் திருநாள். தமிழீழ தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாக, தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற சத்திய இலட்சியத்திற்காக மடிந்த எமது மான வீரர்களை எமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசிய நாள். எமது வீரமறவர்களைப் பூசித்து வணங்கும் திருநாள்.

மண்மீட்புக்காக உயிர்நீத்த மாவீரர்கள் புனிதமானவர்கள். பூசிக்கப்பட வேண்டியவர்கள். காலாதி காலம் நினைவில் வைத்துப் போற்றப்பட வேண்டியவர்கள். எதிர்வரும் நாட்களில் இந்த கனடிய மண்ணில் நடைபெறவுள்ள மாவீரர்கள்; தொடர்பான மதிப்பளிப்பு மற்றும் நினைவெழுச்சி நாள் ஆகியவற்றில் நாம் கடந்த காலங்களைப் போல பங்கு பற்றி அவர்களது நினைவுகள் எம் மனங்களிலிருந்து நீங்கிவிடாமல் காக்கவேண்டும். தொடர்ச்சியாக இங்கு நடைபெறவுள்ள வணக்க நிகழ்வுகள் மற்றும் ஆலயங்களிலும் தேவாலயங்களிலும் இடம்பெறவுள்ள அனைத்து பிரார்த்தனைகளிலும் நாம் கலந்துகொண்டு வணக்கம் செலுத்த வேண்டும்.

இவ்வாறான கார்த்திகை மாதத்தில் எமது தாயகத்திலிருந்து வரும் செய்திகள் பலவற்றில் சோகமான செய்திகளும் கலந்திருக்கின்றன. எமது முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் பலர் தொடர்ந்து நோய்வாய்ப்பட்டு உயிர் துறப்பதான அந்தச் செய்திகள், மாவீரர் மாதத்திலும் இந்;த முன்னாள் வீரர்கள் மண்ணுக்கு இரையாகும் போது, அவர்களுக்கு இந்த மாவீரர்கள் என்னும் மதிப்பளிக்கும் நாமத்தை வழங்குவதற்கு ஒருவரும் முன்வருவதாக இல்லை, 2009க்கு முன்னர் விடுதலைப் புலிகளின் பெயர்களை பாவித்து தங்;களை வளர்த்துக்கொண்ட பல இணையத்தளங்கள் மற்றும் பலவகையான ஊடகங்கள் இன்று இந்த மாவீர்கள் என்னும் மரியாதைக்குரியவர்கள் பற்றிய எந்தச் செய்திகளையும் வெளியிடாமல் தேவையற்ற செய்திகளுக்;கு முக்கியத்துவம் கொடுத்துவருவதைப் பார்க்கின்றபோது, இந்த மாவீர்கள் பெற்ற மரியாதையை மழுங்கடிப்பது யார் என்பதை மக்கள் விரைவில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.