காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நினைவு தினம் நடப்பதை தடுப்பதற்கு யாருக்கும் உரிமையுமில்லை – இலங்கை விதிவிலக்கல்ல

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நினைவு தினத்தை (ஆகஸ்ட் 30), பாதிக்கப்பட்ட உறவுகளை நடத்த விடாது தடுப்பதற்கு, எந்தவொரு நாட்டிற்கும் எந்தவொரு உரிமையுமில்லை. ஏன் எனில், இந்த நினைவு நாளை ஐக்கிய நாட்டு சட்டத்திற்கு உட்பட்டு அங்கிகரித்தவர்கள், ஐக்கிய நாட்டுச் சபையில் உள்ள அனைத்து உறுப்பின நாடுகளுமே. இதில் இலங்கை விதிவிலக்கல்ல !!

நேற்று மட்டக்கிளப்பில், இடம்பெற்ற இன் நிகழ்வை தடுப்பதற்கு, நீதிமன்றத்தின் ஆணையென்று காவல்துறையால் சொல்லப்பட்ட விளக்கம், இந்த நிகழ்வு இடம்பெற்றால் விடுதலைப் புலிகள் திரும்ப உருவாகி விடுவார்களென்று,

இதில் வேடிக்கையென்னவென்றால், காணாமல் போன தங்களின் குடும்ப உறவுகளை தேடி, பல வருடமாக போராடும் மக்களிற்கு, எந்தவொரு நீதியையும் கொடுக்க முடியாத காரணத்தால், இவர்கள் விடுதலைப் புலிகளை திரும்ப உருவாக்க நினைக்கின்றார்களென்று பொய் சொல்வது, இலங்கை நீதிமன்றத்தின் இயலாமை !!

முள்ளிவாய்க்கால் முடிந்த பிறகு, 12 ஆயிரம் முன்னாள் போராளிகளிற்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்ததும் மற்றும் முன்னாள் போராளிகள் இலங்கையின் அரசியல் நீரோட்டத்தில் சட்டரீதியாக செயற்பட அங்கிகாரம் கொடுத்ததும் முன்னாள் மகிந்த அரசு தானே !!

இப்படியிருக்கும் பட்சத்தில், எப்படி எவ்வாறு இந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களினால், திரும்பவும் விடுதலைப் புலிகள் உருவாகுமென்று, தற்போதைய மகிந்த அரசு பயப்படுவதன் காரணம் தான் என்ன !!

இந்த மக்களின் பாரிய எழுச்சியால், ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமை அமைப்பிலும் மற்றும் சர்வதேச நீதிமன்றத்திலும் இவ் விடையம் அழுத்தமாக கொண்டு வரப்பட்டால், தற்போதைய இலங்கை ஜனாதிபதி மற்றும் அரசிற்கும் சிக்கல் வருமோ என்ற பயத்தில், இலங்கை நீதிமன்றத்தால் இப்படியான தடையை போடவெடுத்த முயற்சியை, மக்கள் உடைத்தெறிந்துள்ளார்கள் என்பதை அவதானிக்க முடிகின்றது !

ஆனால், நேற்றைய தினம் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவுகளின் போராட்டத்திற்கு, ஆதரவாக நின்ற தமிழ் அரசியல்வாதிகள். இவ் நிகழ்வில் தாங்களும் பங்கு பற்றியதை வைத்து, வரப் போகும் மாகாணசபை தேர்தலில், தங்களின் கட்சிக்கு வாக்கு சேகரிக்கலாமென்று நினைத்தால், அது மிக்கத் தவறு !

காணாமல் போன உறவுகளின் நீதிக்கான போராட்டம் வேறு, தமிழ் அரசியல் கட்சிகளின் தனிப்பட்ட கொள்கைகள் வேறு !

கடந்த நல்லாட்சியில், ரணில் – சிறிசேனா அரசை உருவாக்கியவர்கள், இந்த மக்களை கண்டுகொள்ளாத விடையதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் !!