காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நல குறைவால் காலமானார்

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நல குறைவால் இன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்று காலை மூச்சு திணறல் ஏற்பட்டு இருந்தது. அவர் ஏற்கெனவே இரு மாதங்களுக்கு முன்பு மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று மடத்தின் நிர்வாகிகள் கூறியுள்ளனர். அவருக்கு முதலுதவி சிகிச்சையும் அளிக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து சங்கர மடம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், உடல்நல குறைவால் அவர் இன்று காலமானார்.
ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு புதிய ஆடை அணிவிக்கப்பட்டு, மாலை கள் சாத்தி அலங்கரிக்கப்பட்டது. பிறகு மடத்தில் உள்ள மண்டபத்தில் உடல் வைக்கப்பட்டது. பக்தர்கள் அங்கு சென்று ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு நாடு முழுவதும் பக்தர்கள் உள்ளனர். அவரது ஆசி பெற்ற பலர் வெளிநாடுகளில் உயர் பதவிகளில் உள்ளனர். எனவே அவரது உடல் அடக்கம் நாளை நடைபெறும் என்று தெரியவந்துள்ளது.

மடத்தில் உள்ள ஒரு இடத்தில் அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பக்தர்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக மடத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.