காங்., தலைவர் ராகுலின் பங்களா பறிப்பு?

டில்லியில் காங்., தலைவர் ராகுல் வசித்து வந்த எம்.பி., பங்களா, காலி என அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்., தலைவர் ராகுல் கடந்த 2004ம் ஆண்டு முதல் லோக்சபா எம்.பி.,யாக உள்ளார். அப்போது டில்லி, துக்ளக் லேன் பகுதியில் உள்ள 12ம் எண் பங்களாவில் அவருக்கு ஒதுக்கப்பட்டது. எட்டாவது டைப் பங்களாவான இது உச்சபட்ச பாதுகாப்பு வசதி கொண்டது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதும் தற்போது வரை அந்த பங்களாவே ராகுலுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. 2019 லோக்சபா தேர்தலில், அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானியிடம் ராகுல் தோற்றபோதும், வயநாடு தொகுதியில் வென்று லோக்சபாவுக்கு தேர்வாகியிருந்தார்.

இந்நிலையில், லோக்சபா செயலகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை ஒன்றில். ராகுல் வசித்து வரும் பங்களா காலி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது பங்களா வேறு எம்.பி., அல்லது அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படும். இதுகுறித்து ராகுலுக்கு தகவல் எதுவும் சொல்லப்படவில்லை என தெரிகிறது. இது அக்கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.